தவறுகள் தொடர்பான பொறுப்புக்கூறல் இல்லாது இலங்கையில் அமைதி ஏற்படாது – பிரித்தானியா
03 Apr,2019
இலங்கையில் இடம்பெற்ற தவறுகள் தொடர்பான நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் இலங்கையில் நிலையான அமைதி ஏற்படாது என பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரம் தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கப்பட்டது.
இதன்போது, கரேத் தோமஸ் என்ற உறுப்பினர் பாரிய மனித உரிமை மீறல் குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்த தவறும் இலங்கை மீது எடுக்கும் நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்தபோதே பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் ஜெர்மி ஹன்ட் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான அமைச்சர், இலங்கை அரசாங்கத்துடன் தனது தொடர்புகளின் ஊடாக ஒரு மகத்தான வேலைகளை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை எழுப்புவது முற்றிலும் சரியாது எ்ன்றும் குறைந்தபட்சம் இதுகுறித்து இந்த நாட்டில் வாழும் இலங்கை சமூகத்தினர் பலர் அக்கறை கொண்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இலங்கையில் பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட தற்போது நல்ல நிலைமை காணப்படுவதாகவும் அவர் அங்கு எடுத்துரைத்தார்.
எவ்வாறாயினும், நடந்த தவறுகள் தொடர்பான நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் அங்கு நிலையான அமைதி சாத்தியப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.