நோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை
26 Mar,2019
மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மருத்துவ நிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
நோர்வே தமிழரான ‘ஏஞ்சல்’ மண்டப சேவை நிறுவனத்தின் உரிமையாளர் சுதர்சன் பத்மநாதன் அவர்களின் நிதியுதவியுடன் தமிழ் நோர்வே வள ஒன்றியம் (TNRA), மற்றும் தாயகத்திலுள்ள அஹிம்சா சமூக நிறுவனத்தின் கூட்டு அனுசரணையுடன் இந்த மருத்துவ நிலையக் கட்டடம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ நிலையம் புதன்கிழமை 20.03.19 இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjல்rn Gaustedsலூter அவர்களினால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான திறப்பு விழாவில் சுதர்சனின் பெற்றோர் மருத்துவமனையின் பெயர்ப்பலகையினைத் திரைநீக்கம் செய்து வைத்தனர். அஹிம்சா சமூக நிறுவனத்தின் உபதலைவர் இராஜ்மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
எதிர்காலம் நோக்கிய இணைந்த செயற்பாடுகள் பற்றி தமிழ் நோர்வே வள ஒன்றிய இணைப்பாளர் மருத்துவக் கலாநிதி ச.விமலநாதன் , இலங்கையின் அபிவிருத்தியில் புலம்பெயர் தமிழர்களின் பங்கு குறித்து இலங்கைக்கான நோர்வே தூதுவர் தூர்பியொர்ன் ஹவுஸ்ட்சாதர் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
நோர்வே தூதுவர் தனது உரையில், புலம்பெயர் தமிழர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணத்தில் கைத்தொலைபேசி கொள்வனவு செய்தல், கல்யாண மண்டபங்கள் கட்டி ஆடம்பர செலவுகள் செய்வதற்கு பதிலாக தமிழ்ப் பகுதிகளின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையிலான முதலீடுகளைச் செய்வது அவசியமென வலியுறுத்தினார்.
அத்துடன் அபிவிருத்திப் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தையும் குறிப்பாக வாகனேரி போன்ற கிராமத்தை தெரிவு செய்ததற்காக தமிழ் நோர்வே வள ஒன்றியத்திற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வண.பிதா ஜோசப் பொன்னையா ஆசியுரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் ராஜ்பாபு, வைத்தியர் சுகுணன் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர்.
தாயக மக்களின் மருத்துவத் தேவையினை உணர்ந்து இப்பாரிய பணிக்குரிய நிதியுதவியை வழங்கிய சுதர்சனின் மனிதநேயச் சிந்தனைக்கும் கொடை உணர்வுக்கும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ் நோர்வே வள ஒன்றியத்தினர் கூறியுள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 489 குடும்பங்களை உள்ளடக்கிய வாகனேரி கிராம மக்கள் மருத்துவ வசதிகள் எதுவுமின்றி மிகவும் இன்னல்களை அனுபவித்து வந்தனர். நிரந்தர கட்டிடவசதிகளற்ற நிலையில் நடமாடும் மருத்துவ சேவை மூலம் மரநிழலிலும், கூடாரங்களிலும் அவர்களுக்கான மருத்துவதேவைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வந்தது.
தமிழ் நோர்வே வள ஒன்றியம் இக் கிராமத்து மக்களின் அவலங்களை அஹிம்சா சமூக நிறுவனத்தின் உதவியுடன் வெளிக்கொணர்ந்தது.
இக்கிராமத்து மக்களின் அவலங்களை தீர்க்கும் முகமாக ஆரம்ப சுகாதார நிலையம், சிகிச்சைப்பிரிவு, பரிசோதனைப் பிரிவு என பல்வேறு பாகங்களை உள்ளடக்கிய கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் கடந்த ஆண்டு பங்குனி மாதம் நாட்டப்பட்டது. கட்டிட வேலைகள் துரிதகதியில் நடைபெற்று, இம்மாதம் கட்டிடவேலைகள் நிறைவு பெற்றன.
புலம்பெயர்ந்து வாழும் மருத்துவதுறைசார் ஊழியர்கள், மாணவர்கள் இந்த மக்களுக்கு சேவை செய்யவிரும்புமிடத்து தமிழ் நோர்வே வள ஒன்றியம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துதரக் காத்திருக்கின்றது.
ஜேர்மன், பிரான்ஸ், நோர்வே நாடுகளில் மருத்துவதுறைசார் எமது இரண்டாம் தலைமுறையினர் அடுத்த கோடை விடுமுறையின் போது அங்கு பணிபுரிய தயாராகி வருகிறார்கள். இவ்வாறு சேவையாற்ற விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளுமிடத்து அதற்கான ஒழுங்குகளைச் செய்து சேவையை சீரமைக்க இலகுவாக இருக்கும் எனவும் தமிழ் நோர்வே வள ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தமிழர் தாயகத்தில் போருக்குப் பின்னரான சூழ்நிலையில் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மேம்பாட்டுச் செயற்பாடுகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் ஈடுபட்டுவருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய செயற்பாடுகளில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மைலந்தனை கிராமத்தினை முன்மாதிரிக் கிராமமாகத் தத்தெடுத்து அபிவிருத்தி செய்யும் பணிகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.