இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்பதே எமது விருப்பம்: எம்.ஏ.சுமந்திரன்
25 Mar,2019
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்பது தான் எமது நிலைப்பாடு. ஆனால், அதற்கு உடனடியாகச் சாத்தியமில்லை. ஆகவே அதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது. அந்தச் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜெனீவாவில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று இந்த விடயம் சம்பந்தமாக அனைத்து தமிழ்த் தரப்புக்களும் ஒன்றாகக் கூடி ஆராய்ந்திருந்தோம். குறிப்பாக, சர்வதேச சட்ட நிபுணர்களின் பங்கேற்புடன் இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்குரிய ஏதாவது வழியொன்று உள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ந்து அவ்வாறு இருக்குமாயின், அதுகுறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அந்த கூட்டத்தில் நான் குறிப்பிட்டுள்ளேன். எனினும் அந்த செயற்பாடுகள் உடனடியாகச் சாத்தியமில்லாத நிலையில் தற்போதிருக்கின்ற சர்வதேச மேற்பார்வை பொறிமுறையை இழந்து விடாது தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டியுள்ளது.” என்றுள்ளார்.