ஐ.நா. வின் தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிரானது :
24 Mar,2019
இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமை சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமானது, பாதிக்கப்பட்ட மக்க ளின் கோரிக்கைகளுக்கு மாறாக நாடுக ளின் நலன் சார்ந்து நிறைவேற்றப்பட்டுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச் சர் மாணிக்கவாசகர் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட் டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழினத்தின் மீதான போர்குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்கும் இலங்கையை பொறுப்புக்கூற வைக்க அனைத்துலக குற்றவியல் நீதிமன்றமோ அல்லது அதற்கு சமனான அனைத்துலக தீர்ப்பாயங்களே பொருத்தமாகும். அதுதான் எமது நிலைப்பாடும் எதிர்பார்ப்புமாகும். அதனை நோக்கியே எமது செயற்பாடு இருக்கும்.
ஈழத்தமிழர்களின் நீதிக்கான செயல்வழிப்பாதையும் ஜெனிவா மட்டுமல்ல, அதற்கும் அப்பாலும் நமக்கான வாய்ப்புக்கள் அனைத்துலக அரங்கில் இருக்கின்றன. நடந்துள்ள ஐ.நா. வின் 40ஆவது கூட் டத் தொடர் தமிழர் தரப்புக்களை ஒற்றைப்புள்ளியில் இணைத்துள்ளது .
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் நோக்கிய செயல்முனைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் பலவும் ஒன்றுபட்டிருப்பது ஈழத்தமிழர்களுக்கான நீதிக்கான செயல்முனைப்பில் வலுவான ஒன்றாக எதிர்காலத்தில் அமையும் என்றார்.