ஜெனிவா பக்க அமர்வில் சரத் வீரசேகர குழு குழப்பம் – தமிழ்ப் பிரதிநிதிகளுடன் வாக்குவாதம்
20 Mar,2019
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பக்க அமர்வில் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினரால் குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்குச் சமாந்தரமாக, பக்க அமர்வுகள் இடம்பெறுகின்றன.
நேற்று சிறிலங்கா தொடர்பான பக்க அமர்வு ஒன்று, பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்துடன் இணைந்து, பசுமை தாயகம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், சிறிலங்காவில் இருந்து வந்திருந்த றியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான, குழுவினரும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் புலம் பெயர் தமிழர்களின் போர்க்குற்றச்சாட்டுகளை றியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான, குழுவினர் நிராகரித்து, குழப்பம் விளைவித்தனர்.
இதனால் இரண்டு தரப்புகளுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
நிகழ்வு முடிந்த பின்னரும், கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்துக்கும், சரத் வீரசேகர தலைமையிலான குழுவினருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.