இலங்கை மீதான புதிய தீர்மானத்தை போலித் தேசியவாதிகள் எதிர்க்கின்றனர் –
18 Mar,2019
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது புதியதொரு தீர்மானம் கொண்டுவரப்படக்கூடாது என போலித் தேசியவாதிகள் கூறி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அத்தகைய சதிப்பொறிக்குள் தமிழ் மக்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், 34/1 என்ற தீர்மானத்தின் பிரகாரம் இலங்கைக்கு கால அவகாசம் வழங்காவிடின் ஐ.நா.வில் இலங்கை சம்மந்தமாக ஒரு விடயத்தையும் கையாள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மனித உரிமை உயர்ஸ்தானிகருக்கு கொடுக்கிற அந்த ஆணை புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்வதால் அது சர்வதேச மேற்பார்வையை நீடிக்கிற ஒரு செயற்பாடாக அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால். அது புதுப்பிக்கப்படாவிட்டால் இலங்கை ஐ.நா. வுக்கு வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றியதா இல்லையா என்பதை கண்டறிவது கடினம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்த செயற்பாடு சர்வதேசத்தின் பார்வை இலங்கையை விட்டு முற்றாக விலகிவிட வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகையால் கால அவகாசம் கொடுப்பதென்று கூறுவது ஒரு தவறான கருத்து எனவும் அதனை மக்களிடம் கூறி சிலர் போலித் தேசியவாதத்தை காண்பிக்க முனைவதாவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் கடந்த இரண்டு தடவை இணை அனுசரணை கொடுத்திருக்கின்றது எனவே இந்தத் தடவையும் அதனை கொடுக்கவேண்டும் எனபதே கூட்டமைப்பின் நிலைப்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் ஐனாதிபதி அதிலிருந்து தப்பிக்க தற்போது முனைவதாக குற்றம் சுமத்தியுள்ள அவர், ஐனாதிபதி புதுத் தீர்மானம் கொண்டுவர சொல்வது எவ்வாறு எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.