போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு தீர்வு வழங்கக் கோரியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்ற கோரிக்கைகளை முன்வைத்தும் , யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் ”நீதிக்காய் எழுவோம்” மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பேரணியானது யாழ்.பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகி, பலாலி வீதி, பிறவுண் வீதி, நாவலர் வீதி ஊடாக பேரணியாக சென்று, யாழ். ஸ்ரான்லி வீதி வழியாக யாழ். மாநகர சபை திறந்தவெளி மைதானத்தை சென்றடைந்தது.
பெருமளவில் திரண்ட மக்கள்
மேலும், குறித்த போராட்டத்தில் பங்கு கொண்ட போராட்டக் காரர்கள், ஐ.நாவே தமிழ் மக்கள் விடயத்தில் தலையீடு செய், தமிழ் மக்கள் மீது இனப்படு கொலை மேற்கொள்ளப்பட்டதை ஐ.நா. ஏற்றுக் கொள்ள வேண்டும், ஐ.நா. பாதுகாப்புச் சபையூடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இனப்படுகொலை விசாரணைகள் கொண்டு செல்லப்பட வேண்டும், இலங்கை அரசிற்கு இனியும் கால அவகாசம் வழங்காதே, தமிழர் தாயகத்தில் இருந்து இலங்கை இராணுவம் வெளியேற வேண்டும்,
சர்வதேசமே இனியும் வேடிக்கை பார்க்காதே, அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் நிலை என்ன?, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, எமது நிலம் எமக்கு வேண்டும், தமிழர் தம்மை ஆளவேண்டும், ஐ.நாவே மௌனம் ஏன், காத்திருப்பு என்னும் பெயரில் ஏமாற்றியது போதும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அரசே பதில்கூறு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கையில் ஏந்தியவாறும், வான் அதிர கோஷங்களை எழுப்பிய வாறு கடுமையான வெய்யிலினையும் பொருட்படுத்தாது பேரணியில் கலந்துகொண்டு தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தினர்.
தமிழ் அரசியல் வாதிகளின் பிரசன்னம்
இப் பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள், காணாமல் ஆக்கபட்டோருடைய உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் தமிழ்மக்கள் கூட்டணியின் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புமொட் கட்சியின் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், செயலாளர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், சர்வேஸ்வரன், அருந்தவபாலன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் குகதாஸ் ஆகிய அரசியல் பிரமுகர்கள் போராட்டத்தில் பங்குகொண்டிருந்தனர். இருந்த போதிலும், இது முற்றிலும் பல்கலைக்கழக மாணவர்களினதும், பொதுமக்களினதும் போராட்டமே. ஆகையால் அரசியல் பிரமுகர்கள் முன்னிலை வகிக்க வேண்டாம் என மாணவர் ஒன்றியம் விடுத்த வேண்டுகோளினை அடுத்து போராட்டத்தில் முன்னிலை வகிக்காமல் பின்தங்கியிருந்தனர்.
இந்நிலையில் யாழ். நகர வீதிகளினூடாக கால்நடையாக யாழ். முற்றவெ ளி மைதானத்தை சென்றடைந்ததுடன், மாபெரும் கவனயீர்ப்பு போரட்டமாக முன்னெடுக்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட தமது பிள்ளைகளை இழந்த தாய்மார்கள் கண்ணீர் மல்க, ஐ.நாவே எங்களை காப்பாற்று, எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தா, நாம் உன்னையே நம்புகின்றோம், எமது பிள்ளைகளை கண்ணால் பார்க்க வேண்டும், ஐ.நாவே எமது கோரிக்கைக்கு செவிசாழ்த்து எமக்கு தீர்வினை பெற்றுத்தா போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பல்கலை மாணவர் ஒன்றியத்தினால் பிரகடனம்
போராட்டத்தின் இறுதியில் மாணவர் ஒன்றியத்தினால் பிரகடனம் வாசிக்கப்பட்டது. அதில் தமிழ்மக்கள் மீதான சிங்கள பௌத்த பேரின வாதத்தின் அடக்கு முறையின் உச்சமே 2009 ஆம் ஆண்டு இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டமையுமாகும். இவ் மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் மனித உரிமை சட்டம் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள், இனப்படுகொலை என்பவற்றுக்கெதிரான சர்வதேச நீதி விசாரணை ஒன்றினை தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்த போதும் சர்வதேசம் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மூன்றில் ஒன்று தீர்மானத்தின் மூலம் கலப்பு விசாரணை பொறிமுறை உட்பட 25 விடயங்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என பரிந்துரை செய்தது.
மேற் குறிப்பிட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30/1 தீர்மானத்தின் 25 பரிந்துரைகள் நிறைவேற்றாது கால இழுத்தடிப்பு செய்து வருகின்றது. ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25 பரிந்துரைகள் இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம் சம்பந்தமான ஒரு கலந்தாய்வு செயலணியை உருவாக்கியது. இச் செயலணி முன்னேற்ற கரமான பரிந்துரைகளை செய்த போதிலும் இலங்கை அரசாங்கம் வேண்டுமென்றே உதாசீனம் செய்தது.
அதுபோல காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம் உருவாக்கப்பட்டபோதும் அதன் செயற்றிறன் அதன் செயற்றிறன் அற்ற தன்மையாலும் திட்டமிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கையாலும் அதிகாரம் அற்ற ஒன்றாகவும் காணப்படுவதால் ஏமாற்றம் அளிக்கும் ஒன்றாகவே உள்ளது.
மேலும் இழப்பீட்டுக்கான சட்டம் தொடர்பில் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும் இதுவரையில் இழப்பீட்டுக்கான அலுவலகம் உருவாக்கப்படவில்லை. பயங்கர வாதத் தடைச்சட்டத்தை மீளாய்வு செய்தல் எனும் போர்வையில் அதனை விட மோசமான சட்டம் ஒன்றை உருவாக்க அசாங்கம் திட்டமிட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்ற வகையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை புறந்தள்ளும் வகையில் யாப்பு உருவாக்கல் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும் இன்றும் அத்தகைய முயற்சிகள் கைகூடப்படவில்லை.
இவ்வாறான நிலையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 25 பரிந்துரைகளும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற நிலையில் மீள கால அவகாசம் வழங்குவது மேலும் கால இழுத்தடிப்புக்கே வழிவகுக்கும் என்பதால் கால அவகாசம் வழங்குவதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதியே என்ற முடிவினை நோக்கி ஐ.நா. சபையானது தமிழ் மக்களை தள்ளப் போகின்றதா என்ற கேள்வியும் எம்மத்தியில் எழுவதும் நியாயமானதே. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் தமிழ் மக்களுக்கு பூர்விகமான தாயகத்தில் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலான திட்டமிட்ட குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றமை, தொடர்ந்தும் முன்னாள் போரளிகள் கைது செய்யப்படுகின்றமை, அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமை, தமிழ் மக்களின் காணிகளில் இருந்து முழுமையாக இராணுவத்தினர் வெளியேறி தமிழ் மக்களை மீள் குடியேற்றம் செய்யாமை, தமிழ் மக்களின் பூர்வீக தாயகத்தில் பௌத்த விகாரைகள் அமைக்கின்ற செயற்பாடுகள் தொடர்கின்றமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தீர்வின்றி தொடர்கின்றமை, மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாகவும், தொல்லியல் திணைக்களத்தின் ஊடாகவும், வனவள பாதுகாப்புத் திணைக்களங்கள் ஊடாகவும் நில ஆக்கிரமிப்புக்கள் தொடர்கின்றமை போன்ற தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகள் இன்றும் தொடர்ந்து நிலையிலேயே இருக்கின்றன.
இந்த நிலையில் கால அவகாசம் வழங்குவதன் மூலம் இலங்கைத் தீவில் தமிழ்மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்வதற்கான சர்வதேச ம் அங்கீகாரம் அளிக்கப் போகின்றதா? ஆயுதம் போராட்டம் மௌனிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரமும் உளத் தேவைகளும் இதுவரையில் மேம்படுத்தப்படவில்லை.
1971களில் மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலினால் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதோடு, தொடர்ச்சியாக இதுவரை காலம் பல்கலைக்கழகத்திற்கு தமிழ் மாணவர்கள் உள்வாங்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுகின்றது.
மேலும், தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அதனூடாக இனப்பிரச்சினை க்கு தீர்வினை நோக்கி இலங்கையினை சர்வதேச சமூகம் நகர்த்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். எனவே தமிழ்மக்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் மூன்றில் ஒன்று தீர்மானத்தையே அரசு ஏற்றுக்கொள்ளதாத நிலையில் தொடர்ந்தும் கால அவகாசம் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே மனித குலத்திற்கு எதிரான இனப்படுகொலைகள், உரிமை மீறல்கள் என்பன விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.