மோதலா? தீர்வா? ஆட்சியாளர்கள் தீர்மானிக்க வேண்டும் சபையில் சம்பந்தன் வலியுறுத்தல்
14 Mar,2019
அரசியல் தீர்வுகளுக்காக இதுவரை நாம் முன்வைத்த யோசனைகளையும் கையாண்ட முயற்சிகளையும் குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு மீண் டும் நாட்டில் ஒரு மோதலை உருவாக்கப்போகின்றோமா? அல்லது இது வரை எடுத்த முயற்சிகளை கொண்டு தீர்வை நோக்கி பயணிக்கப்போகின்றோமா? என்பதை ஆட்சியாளர்கள் தீர்மானிக்க வேண்டும்.
இந்த நாட்டில் அரசியல் தீர்வை எட்டாது ஒருபோதும் நாட்டினை கட்டியெழுப்ப முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
மைத்திரி, -ரணில், -மஹிந்த மூவருமே அதியுச்ச அதிகாரப் பகிர்வை முன்னெடுப்பதாக கூறியும் இன்றுவரை தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர் ஆதங்கம் வெளியிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் பொருளாதார நெருக்கடியொன்று உருவாகியுள்ள நிலையில் நிதி அமைச்சர் வரவு செலவு திட்டமொன்றை முன்வைத்துள்ளார்.
அதேபோல் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஏனைய அபிவிருத்திகளுக்கும் விசேட நிதியம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு இவை பயன்பாடாக அமையும்.
அதேபோல் நாடு கடன் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது. கடன், சேவைகள் மற்றும் பாதுகாப்பு என்ற காரணிகளுக்கு அதிக அளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆட்சியிலும் பாதுகாப்புக்கு அதிக பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு தரப்பும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு செயற்படுகின்றனர்.
இந்த நாட்டின் அபிவிருத்திக்கு கடந்த கால சிவில் யுத்தம் பாரிய தடையாக அமைந்தது. இதில் பிரதான இரண்டு கட்சிகளும் அரசியல் தீர்வு ஒன்றினை முன்வைத்திருந்தால் யுத்தத்தை தவிர்த்திருக்க முடியும் ஆனால் நாட்டில் ஒரு சரியான தலைமை இல்லாது போனமையே யுத்தத்திற்கு காரணமாக அமைந்தது. அப்போதே தீர்வு ஒன்றினை கொடுத்திருந்தால் பிரபாகரன் கொல்லப்பட்டிருக்க மாட்டார்.
இன்றுவரை தீர்வு இல்லை
தமிழர்கள் இறுக்கமானவர்கள் அல்ல. நாம் ஆழமாக கலாசார மற்றும் பண்பாட்டைக்கொண்ட நபர்கள். அதேபோல் 25 ஆண்டுகால யுத்தத்தை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவந்தது.
இதில் சர்வதேச சமூகத்தின் முழுமையான ஆதரவுடன் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டனர். இலங்கையில் விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்டனர்.
அதேபோல் சர்வதேச நாடுகளிலும் விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்டனர். யுத்தம் முடிந்தவுடன் அரசியல் தீர்வு கிடைக்கும் என கூறினீர்கள். ஆனால் இன்றுவரை தீர்வு கிடைக்கவில்லை.
தமிழர் தரப்பு தீர்வு எட்ட முழுமையான ஆதரவை அரசாங்கத்திற்கு வழங்குகின்றது. தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழ் மக்களும் அரசியல் தீர்வு விடயத்தில் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றனர். எமது இலக்கை அடைய எம்மால் முடிந்த சகல விட்டுக்கொடுப்புகளையும் செய்து வருகின்றோம்.
இந்த விவகாரத்தில் பல விடயங்களில் எமக்கு தோல்வி கிடைக்கும் என்பதை எம்மால் உணர முடிகின்றது.
ஆனாலும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் எமது முழுமையான அர்ப்பணிப்புடன் எமது முயற்சியை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
மேலும் இன்றும் நாட்டில் ஊழல், வீண் விரயம் என்ற பல விடயங்கள் உள்ளன. இதில் இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு தப்பிக்க முயற்சித்து வருகின்றனர்.
ஆனால் இதன் விளைவுகள் இறுதியாக நாட்டினையே பாதிக்கும். இந்த ஆட்சிக்கும் நாட்டினை பலப்படுத்த தெரியவில்லை. சர்வதேச முதலீட்டாளர்கள் குறித்து அக்கறையில்லாது இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
25 வருடகால யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் நாடு இன்னமும் முன்னேற முடியாதுள்ளது. எம்மைப்போல உலகத்தில் பல நாடுகள் நெருக்கடியான சூழலில் இருந்து அபிவிருத்தியடைந்துள்ளன.
இந்த விடயத்தில் சிங்கபூர் எமக்கு நல்லதொரு உதாரணமாகும். 1950 ஆம் ஆண்டுகளில் சிங்கபூர் இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்த நாடாக மாறவேண்டும் என கூறினார்கள்.
இலங்கையை இலக்காக கொண்டு சிங்கபூர் வளர்ச்சி கண்டது. அதற்கு அந்த நாட்டின் ஐக்கியம், ஒற்றுமை, புரிந்துணர்வு என்ற விடயங்கள் சாதகமாக அமைந்தன.
சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும்
ஆசிய கண்டத்தில் ஏனைய நாடுகளை எடுத்துப்பாருங்கள். பங்களாதேஷ் இலங்கையை விடவும் மோசமான நிலைமையில் இருந்த நாடாகும். அங்கு பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு, பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தது.
ஆனால் இன்று அந்த நாடு நவீனத்துவ பாதையில் பயணித்து வருகின்றது. எமது நாட்டுக்கும் அவ்வாறான வாய்ப்புகள் இருந்தன.
சர்வதேச சமூகம் எமக்கு உதவியாக இருக்கும் என நாம் நம்புகின்றோம். ஏனெனில் இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு என்ற நம்பிக்கை சர்வதேசத்திடம் உள்ளது. ஆகவே அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.
ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டியது மட்டுமே எமக்குள்ள ஒரே இலக்காக உள்ளது. ஆகவே இதனை வெற்றிகொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்.
எம்மத்தியில் பாகுபாடு இல்லாது தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் அனைவரும் ஒரேமாதிரி நடத்தப்பட வேண்டும். சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளை கடந்தும் நாம் முரண்பாடுகளுடன் செயற்பட முடியாது.
பிரிவினையுடன் இருக்க முடியாது. ஆளுகை பகிரப்பட வேண்டும். எல்லா மக்களும் சமத்துவமாக இருக்க வேண்டும். இலங்கை அனைவருக்கும் சொந்தமானது என்ற உணர்வு இருக்க வேண்டும்.
பல இன கலாசாரா பன்மைத்துவ சமூகம் என்ற உணர்வு இருக்க வேண்டும். உலகில் வளர்சிகண்ட அனைத்து நாடுகளும் இதனையே கையாண்டுள்ளன. ஆகவே நாமும் அதனையே செய்ய வேண்டும். இன ஐக்கியத்தை ஏற்படுத்த நாம் பின்வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு சிலரின் முயற்சி
எனினும் ஒருசிலர் தமது அதிகாரத்தை அரசியல் ரீதியாக பெற்றுக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். இதனை கைவிட வேண்டும்.
நாம் அரசியல் ரீதியிலான எமது வெற்றியை பெற்றுக்கொள்ள 1983 ஆம் ஆண்டு எமது போராட்டத்தை முன்னெடுத்தோம். அப்போது 13 ஆம் திருத்தம் இருந்தது. எனினும் 13ஆம் திருத்தம் தீர்வு அல்ல. இது தீர்வுக்கான ஆரம்பம் மட்டுமேயாகும். ஆயினும் தீர்வுகளை நோக்கிய பயணம் முன்னகரவில்லை.
அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் கடந்த காலங்களில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆட்சியில் இருந்த சகல அரசாங்கமும் ஒவ்வொரு காலகட்டத்தில் தீர்வுகளுக்கான ஆணைக்குழுக்களை அமைத்து முயற்சிகளை முன்னெடுத்தன.
13 ஆம் திருத்தத்திற்கு அப்பால் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டது. அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் எமது கடமை நிறைவேற்றப்படவில்லை.
இதுவரையில் நாம் முன்னெடுத்த அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு மீண்டும் நாட்டில் ஒரு மோதல் நிலையை உருவாக்கும் நிலைமையை உருவாக்கப்போகின்றோமா அல்லது முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுகளை கொண்டு ஆரோக்கியமாக முன்னகரப்போகிறோமா?. இதில் எது எமது கடமை?
தீர்வுக்கான ஆலோசனைகள்
என்னைப்பொறுத்தவரை இதற்கு முன்னர் தீர்வுகள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை படித்து நாட்டினதும் மக்களினதும் நன்மைக்காக ஆரோக்கியமான தீர்வு ஒன்றினை எடுக்க வேண்டும்.
பிரதான இரண்டு கட்சிகளின் மூலமாகவும் தீர்வுக்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இரண்டு கட்சிகள் இணைந்தும் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளன.
அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன -பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் வாக்குறுதிகளை கொடுத்துள்ளன.
இந்த விடயத்தில் பொதுவான கருத்தொண்டும் உள்ளது. அதாவது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் இதற்கு துணை நிக்க வேண்டும்.
இந்த விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் இதற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் இவர்கள் கூறியதை செய்யவில்லை.
அவர் அதிகாரத்தில் இருந்தபோது அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவர் ஆட்சியில் இருந்தபோது கூறியது ஒன்றாகும் நடந்துகொண்டது வேறொன்றாகவும் இருந்தது.
மஹிந்தவின் உறுதி
மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் கடந்த 2006ஆம் ஆண்டு கூறிய விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்,” பிரிக்கமுடியாத நாட்டுக்குள் ஒரு அதிகார பகிர்வை முன்னெடுப்போம்” என கூறினார்.
“அந்தந்த பிரதேச மக்கள் தமது ஆட்சியை தீர்மானிக்க வேண்டும். அவர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என கூறினார். எந்த தீர்வும் அதிக பட்ச அதிகார பங்கீட்டை கொண்டிருக்க வேண்டும்.
பெரும்பான்மை இதற்கு சார்பாக இருந்து அமைதியை ஏற்படுத்த வேண்டும். அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு நியமத்துக்கு பெரும்பான்மை சமூகம் வர வேண்டும்” என்றார்.
அதேபோல் யுத்த முடிவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் முன்னிலையில் உறுதியளித்த விடயங்களாக ” அரசியல் தீர்வை பெற்றுக்கொடுத்து, நீண்டகால அபிவிருத்தியை முன்னெடுப்போம்” என வாக்குறுதி கொடுத்தார். “13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்துவதுடன் சகல கட்சிகளையும் இணைந்து ஒரு பரந்துபட்ட வேலைத்திட்டம் ஒன்றினை கொண்டுவருவோம் ” எனக்கூறினார்.
பஷிலின் நிலைப்பாடு
அதேபோல் பஸில் ராஜபக் ஷ 2008ஆம் ஆண்டு இந்தியாவில் என்ன கூறினார் – “இரண்டு தரப்பினரும் ஒரு சமாதானமான அமைதியான பேச்சுவார்த்தை மூலமும் தீர்வு காண இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதில் இந்தியா பக்கபலமாக இருந்து 13 ஆம் திருத்தத்தை முழுமையான நடைமுறைப்படுத்த நாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக கூறினார். “
தற்போதும் நல்லிணக்க செயன்முறை மூலமாக தீவு காண வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூறுகின்றது.
அப்போது உச்சபட்ச அதிகார பகிர்வுக்கு ஆதரவாக இருந்த மஹிந்த ராஜபக் ஷ இன்று அதற்கான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.
அரசியல் தீர்வுக்குகளை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை இவர்கள் கொண்டிருந்தனர். அப்போதே உச்சபட்ச அதிகார பகிர்வு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆகவே இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரி- பிரதமர் ரணில்- எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ஆகிய மூவரும் ஒரே நிலைப்பாட்டினை கொண்டுள்ளனர்.
மூவருமே அதியுச்ச அதிகார பகிர்வுக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் தீர்வு விடயத்தில் நடந்தது ஒன்றும் இல்லை. ஆகவே பொருளாதாரம் வெற்றிபெற வேண்டும் என்றால் உள்நாட்டு முதலீடுகளும் சர்வதேச முதலீடுகளும் அதிகரிக்க வேண்டும்.
ஆனால் முதலீட்டாளர்கள் அரசாங்கத்தை நம்பவில்லை. முதலீடுகளுக்கு அச்சப்படுகின்றனர். ஆகவே முதலில் இலங்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொடுங்கள். உள்நாட்டு உற்பத்திகளை பலப்படுத்துங்கள். அதை செய்யாது நாட்டின் பொருளாதாரம் ஒருபோதும் முன்னேற்றம் காணாது.
அதேபோல் இந்த நாட்டின் அரசியல் தீர்வு ஒன்றினை எட்டும் வரையில் இந்த நாட்டினை ஐக்கியமாக கட்டியெழுப்ப முடியாது என்றார்.