இதுவரை முழுமையாக 316 எலும்புக் கூடுகள்
27 Feb,2019
2018இன் ஆரம்ப நாட்களில் சர்வதேச தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கு அகழ்வு வேலைகள் இடம்பெற்றன. அந்த அகழ்வு வேலைகளின் போது மனித எலும்புகள் மற்றும் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதனையடுத்து மேலதிக அகழ்வு வேலைகளில் இறங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் மன்னார் சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ஷ ஆகியோர் இந்த அகழ்வு வேலைகளை நேரடியாகக் கண்காணிப்பதற்கு நியமிக்கப்பட்டனர்.
இதனையடுத்து கடந்த 18ஆம் திகதி வரை மேற்படி அகழ்வு வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்ட அணி மொத்தம் 140 வேலை நாட்களாக அகழ்வு வேலைகளில் ஈடுபட்டதாக அறிய முடிகிறது. இந்த நாட்களில் அரசாங்க விடுமுறை நாட்கள் உள்ளடக்கப்படவில்லை.
இதுவரை இடம்பெற்ற அகழ்வுகளின் போது 316 முழுமையான எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 307 எலும்புக் கூடுகள் மன்னார் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 26 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையவை என்று இனங்காணப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விசேட சட்ட மருத்துவ அதிகாரிகள், அரச பகுப்பாய்வாளர்கள் மற்றும் அரச சட்டத்தரணிகள் முன்னிலையில் இடம்பெற்ற அகழ்வு நடவடிக்கைகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட 12 எலும்புத் துண்டுகள் எப்போதையவை என்பதை சரியாக இனங்காண்பதற்காக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பரிசோதனைச்சாலைக்கு அவை அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் பரிசோதனை மூலம் அந்த எலும்புக்கூடுகளுக்கு உரியவர்கள் எப்போது கொல்லப்பட்டனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
சுடுகாட்டின் சரித்திரம்:
மன்னார் புதைகுழி அமைந்துள்ள இடம் 1944 முதல் பொதுமக்கள் மயானமாக இருந்தது. 1970 முதல் 1971 வரை அது மீனவர்கள் மற்றும் வண்டிக்காரர்கள் ஓய்வு பெறும் இடமாக இருந்தது. 1971இல் அந்த இடத்தில் சந்தைப்படுத்தல் திணைக்களத்தின் கூடமொன்று அமைக்கப்பட்டது. 1985இல் இந்த இடத்தில் மக்கள் கடைகளை அமைத்துக் கொள்ளத் தொடங்கினர். இந்த இடம் 'பெரியகடை' என்று அப்போது அழைக்கப்பட்டது. அப்போது கூட அங்கே எலும்புக் கூடுகள் கிடைத்ததாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர். ஆனால் அவை அங்கேயே புதைக்கப்பட்டு அவற்றுக்கு மேல் கடைகள் கட்டப்பட்டன.இந்நிலையில் சந்தைப்படுத்தல் திணைக்களத்தின் விற்பனை கூடம் நட்டம் காரணமாக 1990 இல் மூடப்பட்டது. அதனையடுத்து 1991 இல் சின்னக்குடி பிரதேசத்தில் இருந்த மக்கள் வங்கிக்கிளை இந்த இடத்துக்கு மாற்றப்பட்டது. 2010 இல் அந்த மக்கள் வங்கி தற்போது அமைந்துள்ள உப்புக்குளம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் இங்கு ச.தொ.ச தொகுதி நிரமாணிக்கப்பட்டது.
இரத்தம், எச்சில் மாதிரி சேகரிப்பு:
இந்நிைலயில் மன்னாரில் காணாமற் போனவர்களின் உறவினர்களிடம் வந்த ஒரு குழு அவர்களின் எச்சில் மற்றும் இரத்த மாதிரிகளை சேகரித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மன்னார் மாவட்ட மகளிர் அமைப்பின் தலைவர் மகாலட்சுமியின் தலையீட்டினால் மன்னார் மாவட்ட மகளிர் அமைப்பின் அலுவலகத்துக்கு உறவினர்கள் அழைக்கப்பட்டு இந்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக தெரியவருகிறது. எனினும் இவர்களது செயற்பாட்டுக்கு எந்தவொரு முன்அனுமதியும் பெறப்படவில்லை என்று நம்பப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட எச்சில் மற்றும் இரத்த மாதிரிகள் டி. என். ஏ. (மரபணு) சோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. அத்துடன் காணாமற் போனவர்களின் பிறப்புச் சான்றிதழ்களின் பிரதிகள், மற்றும் அவர்களது படங்கள் காணாமற் போனவர்கள் பற்றி பொலிஸில் முறைப்பாடு செய்யப்படட திகதி ஆகியவற்றையும் சேகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி இரத்த மற்றும் எச்சில் மாதிரிகளை சேகரித்த குழு கௌதமாலாவில் இருந்து வந்திருப்பதாகத் தெரிகிறது. இக்குழு காணாமற் போனோரின் உறவினர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியது. இதில் காணாமற் போனோரின் குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் வரையில் பங்குபற்றினர்.
எவ்வாறெனினும் கௌதமாலாவில் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படும் இந்த அணியைப் பற்றி அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இராஜதந்திரிகள் விஜயம்:
இந்நிலையில் மன்னார் புதைகுழி பிரதேசத்துக்கு இப்போது உள்ளூர் மற்றும் வெளிநாட்டினரின் வருகை அதிகரித்து வருகிறது. இவர்களில் இராஜதந்திரிகள் மற்றும் ஊடகவியலாளர்களும் உள்ளடங்குகின்றனர்.
இது தொடர்பாக லேக் ஹவுஸ் செய்தியாளர்கள் சேகரித்த தகவல்களின்படி கனேடிய தூதுவர், நெதர்லாந்து பேராசிரியர் ஒருவர், வட மாகாண சபை உறுப்பினர் ஒருவர், அமெரிக்கத் தூதரகத்தின் பிரதிநிதி ஒருவரும் அவரது மொழி பெயர்ப்பாளரும், இந்தியாவில் தமிழ்நாட்டில் இருந்து மக்கள் பார்வை அமைப்பில் இருந்து ஏழு பேர், ஜேர்மன் தூதுவர் ஜொனதன் மில்லர், செனல் 4 ஊடகவியலாளர்கள் மூவர், பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தில் இருந்து செயலாளர் ஒருவர், பிரிட்டிஷ் அரசியல்வாதி ஒருவர், மனித உரிமை அலுவலக பிரதிநிதியொருவர், பிரிட்டிஷ் மத விவகார அதிகாரி, கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தில் இருந்து மூன்று ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் விவகார பிரதிநிதி ஆகியோர் அண்மையில் மன்னாருக்கு வந்து சென்றுள்ளனர்.எனினும் இவர்களுக்கு மன்னார் புதைகுழி அமைத்துள்ள இடத்தைப் பார்வையிட அதிகாரபூர்வ அனுமதி வழங்கப்பட்டதா என்று சரியாகத் தெரியவில்லை