ஆட்சி அதிகாரம் எம்கைகளில் வந்தால் ஒன்றாக வாழலாம்!
23 Feb,2019
சம்பிக்கவையும் கைகோர்க்கக் கோரினார் சுமந்திரன்
”தமிழ் மக்களாகிய நாங்கள் இந்த நாட்டில் ஒன்றாக வாழ விரும்புகிறோம். அவ்வாறு ஒன்றாக வாழ்வதற்கு எங்கள் கைகளில் ஆட்சி அதி காரங்கள் சரியான முறையில் வழங்கப்படவேண்டும். எமது அபிலாஷை களைத் தீர்க்கக்கூடிய நியாயமான கோரிக்கைகள் நிறைவேறுவதற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட அனைவரும் எம்மோடு சேர்ந்து கைகோர்த்துக்கொண்டு பயணிக்க வேண்டும். ‘
இவ்வாறு அழைப்புவிடுத்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந் திரன்.யாழ்.வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகில் தூர சேவை தனியார் பஸ்தரிப்பிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் விருந்தின ராகக் கலந்துகொண்டு உரை யாற்றுகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் –
இங்கே செய்யப்படும் திட்டங்கள் ஜனநாயக ரீதியில் செய்யப்படவேண்டும்என்றநல்லதொரு கருத்தை ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். அப்படியான கூட்டங்களாகத்தான் இந்தக் கூட்டங்களும் அமையுமென்று நாங்கள் நம்புகிறோம்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளோடு நடத்தும் கலந்துரையாடல் மூலமாக மக்களை நாங்கள் முன்னிறுத்தி இந்தத்திட்டங்களை இறுதி செய் வதற்கு இதுவொரு சந்தர்ப்பமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இது ஒரு புதிய பாதை. இந்தப் பாதை இந்தப் பிரதேசத்தில் அப்படியான செயற்திட்டம் முன்னொருகாலத்தில் இருந்ததில்லை. அண்மைக்காலத்தில் சிலவருடங் களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஒருவிடயம்தான் இது. அதாவது மக்கள் பிரதிநிதிகளையும் சேர்த்து ஆராய்ந்து இந்தத் திட்டங்களை செயற்படுத்தவேண்டும்,
இங்கு, பல வருடங்களுக்கு பிறகு உரிய விதத்தில் தேர்தல் நடத்தப்பட்டு யாழ். மாநகர சபை தெரிவுசெய்யப்பட்டிருக்கும் இவ் வேளையில் மாநகர சபை சம் பந்தமானவிடயங்களிலும் அவர்களும் பங்களிப்பது மிக்க மகிழ்ச்சியைக் கொடுப்பதாக உள்ளது.
இங்கு உரையாற்றிய ஆளுநர் தனது உரையில், தான் அரசியல்வாதி அல்லர் என்ற காரணத்தால் சில கருத்துக்களைச் சொல்லமுடியும்என்றுசொல்லி
பல அரசியல் கத்துக்களைச் சொல்லிச் சென்றிருக்கின்றார். அடிக்கடி இப்படித்தான் அவர் செய்வார் போல் தோன்றுகிறது. அதாவது நான் அரசியல்வாதி அல்லன் என்று சொல்லிவிட்டு, எல்லா அரசியல் கருத்துக்களையும் சொல்லப் போகிறார் போல் தெரிகிறது.
ஆனால், அவர் சொன்னவற்றில் மிகமுக்கியமான விடயங்கள் இருக்கின்றன. நானும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் ஒரே வானூர்தியில் ஒரே திசையில் இன்றைக்குப் பயணித்து வந்தோம் என்று சொன்னார். ஆம், அவ்வாறுதான் பயணித்தோம். அவ்வாறு பயணித்த திசை யாழ்ப்பாணத்தை நோக்கியதாகத்தான் இருந்தது. ஆகையால் நாங்கள் பயணித்த திசையில் பிழைகிடையாது. இந்த மக்களை மேம்படுத்தவேண்டும்.
அது பௌதீக அபிவிருத்தி மட்டும் சார்ந்ததாக இருக்காது. ஏனென்றால் நாங்கள் இந்த புதிய பயணத்தை ஆரம்பித்தது இன்றைக்கு அல்ல. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக அந்தத் தேர்தலுக்கு, முன்னர் நாங்கள் யாழ்ப்பாணத்தில் ஒன்றாகப் பயணம் செய்தோம். அவ்வாறு பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தோம்.
ஆகவே, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட மாற்றத்தில் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஈடுபட்டவர்கள். புதிய அரசமைப்பு உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட வழிநடத்தல் குழுவில் அமைச்சர் சம்பிக்க ரணவக்வும் நானும் உறுப்பினர்களாக மூன்றரை வருடங்களாக இயங்கியிருக்கிறோம். அதில் இப்போது ஒருபடி நிலைக்கு நாங்கள் வந்திருக்கிறோம்,
இனி அது எப்படியாகும் என்ற ஒரு சந்தேகம் இருந்தாலும் கூட இதுகால்வரை எழுபதுக்கு மேற் பட்ட கூட்டங்களில் நாங்கள் ஒன்றாக அமர்ந்திருந்து ஓர் அறிக் கையை, இப்போது இரண்டாவது அறிக்கையை வெளிக்கொண்டு வந்தோம்,
ஆகையால் பௌதீக அபிவிருத்தி மட்டுமல்ல மிக விசேடமாக எங்கள் மக்களின் அரசியல் உரித்துக்கள் சம்பந்தமாகவும் நாங்கள் ஒரு திசையை நோக்கிப் பார்க்க ஆரம்பித்து சில வருடங்களாகின்றன. அது சரியான முடிவில் போய் நிறைவேற வேண்டும் என்பது எங்கள் பிரார்த்தனை.
சரியான விதத்தில் அதுவும் விசேடமாக தமிழ்மக்களின் கலாசார சின்னமாக இருக்கும் யாழ். நகரில் வைத்து அமைச்சருக்கு நான் விடுக்கும் பணிவான வேண்டுகோள் என்னவெனில், இந்தப் பயணத்தில் இன்னும் சற்றுத் தூரம் எங்களோடு நீங்கள் பயணிக்க வேண்டும். இந்தப் பயணம் சரியான விதத்தில் முடிவுபெற வேண்டும். – என்றார்