கொள்கை மாறா ஒரே தலைவர் அண்ணன் பிரபாகரன் மட்டுமே! வாலிபர் முன்னணி தலைவர் க.பிருந்தாபன்
23 Feb,2019
அஹிம்சை ரீதியான போராட்டத்தின் மூலம் எதையும் சாதிக்கமுடியாது என்றுணர்ந்த இளைஞர்கள், ஆயுத ரீதியில் அரசை எதிர்க்கத் தலைப்பட்டார்கள். பல ஆயுத விடுதலை இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும், எல்லோரும் ஒரே கொள்கையில் பயணித்திருந்தாலும் – துரதிஷ்ட வசமாகத் தங்களுக்குள்ளே முட்டிமோதி, தங்களுடைய கொள்கையை மாற்றிக்கொணடார்கள்.
ஆனால், எந்தக் காலகட்டத்திலும் தன்னுடைய கொள்கையை மாற்றாமல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை தன்னுடைய இறுதி மூச்சுவரை மாறாக்கொள்கையுடன் இருந்த ஒரே தலைவர் அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே.
இவ்வாறு தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட இளைஞரணித் தலைவர் க.பிருந்தாவன்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட இளைஞரணி மாநாடு கடந்தவாரம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டுக்குத் தலைமையேற்று தலைமையுரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து பேசும்போது மேலும் தெரிவித்தவை வருமாறு:-இலங்கைத் தமிழரசுக் கட்சி இன விடுதலைக்காகவும் தமிழர் உரிமைக்காகவும் உருவாக்கப்பட்டதாகும்.
இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டபோது தமிழ் காங்கிரஸில் இருந்த தலைவர்கள் அமைச்சுப் பதவி ஏற்றபோதும் காங்கிரஸில் இருந்து பிரிந்த எமது கட்சி ஸ்தாபகர் மூதறிஞர் தந்தை செல்வநாயகம் தனியாகப் பிரிந்து 1949 ஆம் ஆண்டு மாசி மாதம் 13 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு, மாவிட்டபுரத்தில் துரைச்சாமி ஐயாவின் ஏற்பாட்டில் கட்சியின் அங்குரார்ப்பணக் கூட்டம் நடத்திவைக்கப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் தலைமையை எமது கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகம் அவர்கள் ஏற்று நடத்தினார். அந்தக் கூட்டத்தில் இலங்கை அரசைத் தொடர்ச்சியாக எதிர்த்து இணைப்பாட்சி மூலம் தமிழ் மக்களின் உரிமயைப் பெறுவதே ஒரேவழி என்ற நோக்கத்தோடு, அந்தக் கொள்கையை வடக்கு – கிழக்கு எங்கும் கொள்கைப் பிரகடனப்படுத்தி, அதே ஆண்டு 1949 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18 ஆம் திகதி கொழும்பில எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அதன் தலைவராகத் தந்தை செல்வநாயகம் தெரிவுசெய்யப்பட்டார்.
அந்தக் காலகட்டத்திலே வன்னியசிங்கமும் நாகநாதனும் எமது தலைவர் தந்தை செல்வாவுக்குப் பக்கபலமாக இருந்தார்கள்.எமது கட்சியின் ஆரம்ப அங்கமாக இலங்கை வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் ஒரு சுயநிர்ணய அரசை – ஒரு சுயாட்சித் தமிழரசை – நிறுவுவதே என்று வடக்கு – கிழக்கு எங்கும் – பட்டி – தொட்டி எங்கும் கொள்கை பரப்பி எமது கட்சியை ஒரு மக்கள் கட்சியாக வளர்த்துள்ளார்கள்.
1953 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதலாவது வாலிபர் மாநாடு நடைபெற்றது. அந்த வாலிபர் முன்னணி மாநாட்டின் தலைவராக அந்தநேரத்தில் இளம் சட்டவாளராக இருந்த அமிர்தலிங்கம் தெரிவுசெய்யப்பட்டார்.
1954 ஆம் ஆண்டு பிரதமராக இருநத கொத்தலாவல யாழ்ப்பாணத்துக்கு வந்தார். அந்தநேரத்தில் அமிர்தலிங்கம் தலைமையிலான வாலிபர் முன்னணியினர் மேடையைச்சுற்றி பாரிய எதிர்ப்பை வெளிக்காட்டி கூட்டத்தைத் தடுத்தனர். அதன்பின்னர் 1956 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி போட்டியிட்டு 10 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.
தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணி பல்வேறுபட்ட போராட்டங்களை எமது மக்களுக்காக நடத்தியது. தனிச்சிங்கள சட்டம் அரசால் கொண்டுவரப்பட்டது. அந்த தனிச் சிங்கள சட்டத்தை எதிர்த்து எமது வாலிபர் முன்னணி இளைஞர்களின் ஏற்பாட்டில் கொழும்பு காலிமுகத் திடலிலே பாரிய எதிர்ப்பு சத்தியாக்கிரக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆனால், சிங்களக் காடையர்களால் அந்தப் போராட்டம் முடக்கப்பட்டது. 1960, 1966 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் 14 தொகுதிகளில் வென்றார்கள். 1970 ஆம் ஆண்டு 13 தொகுதிகளில் வென்றார்கள். சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயாட்சித் தமிழரசை அமைக்கவேண்டும் என்ற நம்பிக்கையிலேயே மக்கள் எமக்குத் தொடர்ந்தும் ஆணை வழங்கிவருகின்றார்கள்.
1971 ஆம் ஆண்டு ஒரு முக்கிய காலப்பகுதியாகும். தந்தை செல்வநாயகம் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றிகொண்டு ஒரு ஸ்திரத்தன்மையைக்கொண்ட கட்சியாக நின்றாலும், தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவேண்டும் என்பதற்காக ஜி.ஜி.பொன்னம்பலத்தின் வீடு தேடிச் சென்று தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்திய கூட்டணி ஒற்றை உருவாக்குகின்றார். அதன்பின்னர்|, 1972 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழர் சுயாட்சிக் கழகம் என்பன இணைந்து பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி உதயம் பெறுகின்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழரசில் முன்வைக்கப்பட்ட கொள்கைத் திட்டங்களை தொடர்ச்சியாக எடுத்துச் சென்றது. தமிழர் விடுதலைக்கூட்டணி 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலே சிங்கள அரசை இனி நம்பிப் பயனில்லை என்று தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
1977 ஆம் ஆண்டு தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து பல போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால் எமது கட்சித் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். சிறையிலே அடைக்கப்பட்டார்கள். இன்று நாட்டின் ஜனநாயகத்தைக் காத்த காவலன் என்று சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு எவ்வளவு பெருமைப்பட்டதோ, அதேபோன்று எமது கட்சித் தலைவர்கள் கைதுசெய்யப்பட்ட அந்தக் காலத்தில் ட்ரயல் அட் பார் என்ற வழக்கும் அதேயளவு பெருமையை ஏற்படுத்தியது.
அஹிம்சை ரீதியான போராட்டத்தின் மூலம் எதையும் சாதிக்கமுடியாது என்றுணர்ந்த இளைஞர்கள், ஆயுத ரீதியில் அரசை எதிர்க்கத் தலைப்பட்டார்கள். பல ஆயுத விடுதலை இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும், எல்லோரும் ஒரே கொள்கையில் பயணித்திருந்தாலும் – துரதிஷ்ட வசமாகத் தங்களுக்குள்ளே முட்டிமோதி, தங்களுடைய கொள்கையை மாற்றிக்கொணடார்கள்.
ஆனால், எந்தக் காலகட்டத்திலும் தன்னுடைய கொள்கையை மாற்றாமல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை தன்னுடைய இறுதி மூச்சுவரை மாறாக்கொள்கையுடன் இருந்த ஒரே தலைவர் அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே. – என்றார்.