காங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை
19 Feb,2019
பொருட்களை பரிமாற்றம் செய்து கொள்ள வசதியாக, காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் துறைமுகங்களில் இருந்து தென்னிந்தியாவுக்கு, விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் நடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,
“இந்தியாவின் உதவியுடன் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எதிர்பார்த்திருக்கிறது. இந்தியாவின் உதவியுடன் அங்கு புதிய முனையம் அமைக்கப்படும்.
அங்குள்ள பழைய சீமெந்து தொழிற்சாலை அகற்றப்படும். அங்கு புதிய முனையம் அமைக்கப்படும்.
மன்னார்- வவுனியா- திருகோணமலை இடையிலான நெடுஞ்சாலைக்கும் இந்தியாவிடம் உதவி கோரப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்யவுள்ளோம். இந்த தாங்கிகள் எமது தேவைக்கும் அதிகமானவை. எனவே இந்தியாவின் தேவைக்கான எண்ணெயையும் இங்கு களஞ்சியப்படுத்தப்படும்.
வடக்கில் தென்னைகளைப் பயிரிட அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இங்கு காணிகளை வாங்கி தென்னைகளை பயிரிட பாரிய தோட்ட நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
சிறிய காணிகளை உரிமையாளர்களிடம் இருந்து அவர்கள் குத்தகைக்கு வாங்கிக் கொள்ளலாம். கூட்டு முயற்சி நிறுவனங்களையும் இயக்கலாம்.
அதுபோல பனைமரங்களை பயிரிடும் திட்டமும் விரிவுபடுத்தப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.