நிதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள தீர்வுத்திட்டமானது வரவேற்கத்தக்கது: மாவை
18 Feb,2019
கடன் சுமையிலிருந்து வடக்கு மக்களை விடுவிக்கும் வகையில் நிதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள தீர்வுத்திட்டமானது வரவேற்கத்தக்கது என தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
?நிதி அமைச்சின் ஏற்பாட்டில், வடக்கு மக்களை கடன் சுமையிலிருந்து விடுவிக்கும் வகையில், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்காகப் பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் நாம் நன்றி கூறுகின்றோம்.
நுண்கடன்களை வழங்கும் நிதி நிறுவனங்கள் எமது மக்களை, குறிப்பாக குடும்பத் தலைவிகளை கடுமையாகப் பாதித்துள்ளது. அவர்கள் பெற்ற கடனுக்கான வட்டிப்பணத்தினைச் செலுத்துவதில் அவர்கள் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர்.
இந்நிலையில் நாம் குறித்த கடன்கள் தொடர்பில் அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தோம். அதற்கிணங்க நிதி அமைச்சினால் கடன்பெற்றவர்களுக்கான தீர்வு வழங்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்து? என மாவை சேனாதிராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.