இலங்கை பிரதமர் ரணிலை நரியுடன் ஒப்பிட்ட விக்னேஸ்வரன்
சர்வதேச உதவியுடன் போர்க் குற்ற விசாரணை நடத்துங்கள். நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிந்து கொள்வோம். அதன் பின் மன்னிப்புப் பற்றி ஆராய்வோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞரணி அமைப்பாளர்களுக்கான கூட்டம் நேற்று கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் ரணிலின் பேச்சுக்களின் தாற்பரியம் என்ன? நாங்கள் உங்களுக்குப் பல்கோடிகளைக் கொட்டிக் கொடுக்க உள்ளோம். மருத்துவ மனைகளைக் கட்டுங்கள், பிரதேச சபைக் கட்டடங்களைக் கட்டுங்கள், உடைந்து போன உங்கள் தெருக்களை செப்பனிடுங்கள், பொருளாதார ஏற்றம் காணுங்கள். ஆனால் எங்களின் இந்தக் கொடைக்காக நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றைத்தான்.
அதாவது மன்னித்து மறந்து விடுங்கள். பழையனவற்றை மறந்து விடுங்கள். உண்மையைக் கண்டறிய முனையாதீர்கள். அப்படிக் காண விழைந்தால் உங்களின் இளைஞர்கள் செய்த குற்றங்களும் அம்பலத்திற்கு வந்துவிடும். அது வேண்டாம்;;; மறந்து விடுவோம்; மன்னித்து விடுவோம் என்று கூறியுள்ளார்.
அதாவது உங்களுக்கு நாங்கள் வட-கிழக்கு இணைப்பைத் தருகின்றோம். உங்கள் தாயகத்தில் சுயாட்சியைத் தருகின்றோம். சமஷ்டி ரீதியிலான ஒரு அரசை உங்களுக்கு வழங்குகின்றோம். பதிலுக்கு நீங்கள் மறந்து விடுங்கள். மன்னித்து விடுங்கள் என்று அவர் கூறவில்லை.
மாறாக உங்களுக்குப் பணம் தருகின்றோம், உங்கள் உறுப்பினர்களுக்கு சலுகைகள் தருகின்றோம். உங்கள் பொருளாதார விருத்திக்கு வழி சமைக்கின்றோம்; நடந்து போனதை மறந்து விடுங்கள்; மன்னித்து விடுங்கள் என்று தான் கூறுகின்றார்.
மன்னித்து விடுங்கள் என்று ரணில் கூறியதன் அர்த்தம் என்ன?
இதன் அர்த்தம் என்ன? ஜெனீவாவில் கேள்வி கேட்கப் போகின்றார்கள். நாம் செய்வதாகக் கூறியவற்றை இதுகாறும் செய்யவில்லை. இப்போது உங்களுக்கு சலுகைகளைக் கொடுக்க எண்ணியுள்ளோம்.
கட்சி ரீதியாக அதைச் செய்ய எண்ணியுள்ளோம். ஏற்றுக்கொண்டு உங்கள் உரிமைகளைக் கேளாதீர்கள், உரித்துக்களை நிலைநாட்டப் பார்க்காதீர்கள்.
தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள ஏகாதிபத்தியங்கள் தொடர்ந்து நிலைக்கச் செய்ய உங்களின் ஒத்துழைப்பை நல்குங்கள். ஜெனீவாவில் மீண்டும் கால அவகாசம் பெற்றுக் கொடுங்கள் என்று கூறிச் சென்றுள்ளார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மௌனம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனமாகத் தலையசைத்ததைப் பார்த்தால் அதற்கு அவர்கள் தயாராகி விட்ட மாதிரித் தெரிகின்றது. “எமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள்.
நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று அவர்கள் கூறுவது போலத் தெரிகிறது. துரையப்பா, குமார சூரியர், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் இதைத்தானே கூறினார்கள். அரசாங்கத்திடம் இருந்து பணத்தைக் கறந்து, பதவிகளைப் பெற்று, பொருளாதார விருத்தியை உறுதி செய்து எமது நிலையை சீர்செய்வோம்.
உரிமைகளையும் உரித்துக்களையும் மறந்துவிடுவோம். இவ்வாறு அவர்கள் கூறிய போது நாங்கள் என்ன கூறினோம்? அவர்களைத் “தமிழினத் துரோகிகள்” என்றோம். இன்று என்ன நடந்துள்ளது? அவர்களுக்கு அரசாங்கம் உதவிகள் கொடுத்தால் அவர்கள் துரோகிகள். எங்களுக்கு அவ்வாறு உதவிகள் கிடைத்தால் அது எமது மேலாண்;மைத் திறன். எங்கள் புத்திக் கூர்மையின் வெளிப்பாடு. தந்திரோபாயத் திறமை. இங்கு எமது மக்களின் வருங்காலம் பற்றிய சிந்தனைகள் அடிபட்டுப் போகின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அரசாங்கத்திற்குக் கூறுவது என்ன?
ஆனால் எமது தலைவர்கள் அரசாங்கத்திற்குகூறுவது என்ன? நாங்கள் எங்கள் மக்களுக்கு உங்கள் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிடுவோம். அதாவது எம் மக்களுக்கு இலஞ்சம் கொடுத்து அவர்களை வாங்கிவிடுவோம். அதற்கென்ன? நாங்கள் ஜெனீவாவில் கால அவகாசம் பெற்றுத் தருவோம். பௌத்தத்திற்கு வடகிழக்கில் முதலிடம் அளிப்போம்.
வடகிழக்கை இணைக்காது வைத்திருக்க எமது பூரண சம்மதம் தெரிவிப்போம், சமஷ்டி கேட்க மாட்டோம். உள்நாட்டு சுயாட்சியைக் கேட்க மாட்டோம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களைத் “துரோகிகள்” என்று பச்சை குத்தி கழுதைகள் மேலேற்றி வலம் வரச் செய்வோம் என்று தான் கூறாமல் கூறுகின்றார்கள்.
இந்த விதமான நடவடிக்கைகள் எங்களை எங்கே கொண்டு செல்லப் போகின்றன? அரசாங்கப் பணம் பெறுபவர்கள் தம்மை நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள். தமது உற்றார் உறவினர்களை நன்றாகக் கவனித்துக் கொள்வார். பத்து வருடங்களில் வடகிழக்கு சிங்கள, பௌத்தப் பிரதேசமாக மாறும். மன்னிப்பின் மகத்துவம் இதுதான்.
ரணிலை நரியுடன் ஒப்பிட்ட விக்னேஸ்வரன்
நரி வந்து புள்ளிமானிடம் கூறுகின்றது. உன் மகனைக் கொன்று உண்டவன் நான்தான். மன்னித்துவிடு. இனி நாங்கள் நண்பர்களாக இருப்போம். உன் மற்றைய குட்டிகளையும் என்னிடம் அனுப்பு. நான் அவற்றிற்குப் பொறுப்பு. அவற்றையும் நான் கொன்று சாப்பிட்டால் மீண்டும் உன்னிடம் மன்னிப்புக் கேட்பேன். வருத்தப்படாதே. உன்னையும் உன் குட்டிகளையும் என் பிரதேசத்தினுள் வேண்டுவது போல என் கட்டுப்பாட்டில் உலாவிவர நான் உனக்கு பூரண உரித்துத் தருகின்றேன் என்று கூறுகிறது.
உண்மையைக் கண்டறியவிடாமல் பிரதமர் தடுப்பது எமது உரிமைகளை மறுப்பதற்காக! எமக்குள்ள உரித்துக்களை மறைப்பதற்காக. உலக நாடுகளின் பார்வை உண்மையைக் கண்டறிந்து விடும் என்ற பயத்தினால். இதற்குத் துணைபோகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் துணிந்து விட்டார்கள்.
இதுகாறும் எம் மக்கள் பட்ட பாட்டை மறந்து, ஆயுதமேந்த வேண்டிய காரணத்தை மறந்து, உயிர்த் தியாகங்கள் செய்ததை மறந்து, பிச்சைப் பாத்திரம் ஏந்தி பிச்சை எடுத்து எம்மக்களுக்குப் பிச்சைபோட முன்வந்துள்ளார்கள் என்றார்.
சர்வதேச விசாரணை
எம்மவர் குற்றங்களும் வெளிவந்துவிடுவன என்று மிரட்டுகிறார் பிரதமர். குற்றம் செய்யாத பலரை சிறைகளில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தீர்கள். எம்மைக் கொன்று குவித்தவர்களை சித்திரவதை செய்தவர்களை இதுவரை அடையாளப்படுத்தாது அவர்களுக்கு மன்னிப்பை வேண்டி நிற்கின்றீர்கள்.
அவ்வாறு செய்தவர்கள் யார் என்பதை முறையாக சர்வதேச விசாரணை மூலமாக முதலில் கண்டறியுங்கள். அதன் பின் மன்னிப்புப் பற்றிக் கதைக்கலாம் என்று பிரதமரிடம் கூற எங்களுள் எவரும் இல்லை.
ஆகவே நாங்கள் அரசிடம் கூறுகின்றோம் சர்வதேச உதவியுடன் போர்க் குற்ற விசாரணை நடத்துங்கள். நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிந்து கொள்வோம். அதன் பின் மன்னிப்புப் பற்றி ஆராய்வோம் என்றார் விக்னேஸ்வரன்.