இலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு: பின்னணி என்ன?
14 Feb,2019
இலங்கையில் உள்நாட்டு போர் நிறைவடைந்த பின்னர், வௌிநாடுகளில் குடிபெயர்வது படிப்படியாக முடிவுக்கு வந்த நிலையில் , தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
போர் சூழ்நிலை காணப்படாத போதிலும், இந்த வருடத்தில் இலங்கையிலிருந்து வௌியேறி வௌிநாடுகளில் குடிபெயர முற்பட்ட 80-க்கும் அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் பிரான்ஸூக்கு சொந்தமான ரீயூனியன் தீவை சென்றடைந்த 64 இலங்கையர்கள், அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு பிரான்ஸ் பாதுகாப்பு அதிகாரிகளால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நாடுகடத்தப்பட்ட 64 பேரும் இன்று வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பு - கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இலங்கை குடிவரவு - குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள இந்த குடியேற்றவாசிகளை தேசிய புலனாய்வு சேவைப் பிரிவினரிடம் ஒப்படைக்க, குடிவரவு - குடியகல்வு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பிரான்ஸுக்கு சொந்தமான சிறப்பு விமானத்தின் மூலம் இந்த குடியேறிகள் அழைத்துச் செல்லப்பட்டதுடன், இவர்களில் 54 ஆண்களும், ஆறு பெண்களும், நான்கு சிறுவர்களும் அடங்கியுள்ளனர்.
யாழ்ப்பாணம், நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்தவர்களே ரீயூனியன் தீவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை குடியேறிகளுடன், பிரான்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் 70 பேரும் விமானத்தில் பயணம் செய்திருப்பதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து இந்த விமானம் மாலை 4.30 அளவில் மீண்டும் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் சட்டவிரோதமாக வௌிநாட்டுக்க குடிபெயர்வதற்குத் தயாராக இருந்த 22 பேரை இன்று பகல் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
மொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவை பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவரையும் கைது செய்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் இடைத்தரகர் ஒருவரும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போலீஸ் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து இந்த குடியேறிகளை கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து இரண்டு வாகனங்களையும், 6,27,000 இலங்கை ரூபாய் பணத்தையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே இந்த சட்டவிரோத குடியேற்ற நடிவடிக்கையின் இடைத் தரகராக செயற்பட்டுள்ளதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கையின் பிரதான சந்தேகநபர்கள் இருவரும் திஸ்ஸமகாராம பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநாகல் மாவட்டத்தின், குளியாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரும், கண்டி மாவட்டத்தின் தெல்தோட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவருமே இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கையின் பிரதான சூத்திரதாரிகள் என போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆட்கடத்தல் நடவடிக்கை குடிவரவு - குடியகல்வு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் போலீஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.