கொலையாளி பணிக்கு ஆட்கள் தேவை -
11 Feb,2019
இலங்கை நாட்டில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இனி கருணை காட்ட மாட்டோம். மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தூக்கிலிட்டு கொல்லப்படுவார்கள் என அந்நாட்டின் அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா சமீபத்தில் பாராளுமன்ற உரையின்போது தெரிவித்திருந்தார்.
இலங்கையில் கடைசியாக கடந்த 1976-ம் ஆண்டில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் பதவிக்கு வந்த அதிபர்கள் மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பான எந்த உத்தரவிலும் கையொப்பமிடவில்லை.
இதனால், கடந்த 42 ஆண்டுகளில் எந்த கைதியும் அங்குள்ள சிறைகளில் தூக்கிலிட்டு கொல்லப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய 48 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 30 பேர் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்து வழக்காடி வருகின்றனர். 18 பேரின் உயிர்கள் அதிபரின் கையொப்பத்துக்கான உத்தரவில் ஊசலாடி வருகிறது.
இந்நிலையில், அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா சமீபத்தில் அறிவித்திருந்ததுபோல் இலங்கை சிறைகளில் மரண தண்டனையை நிறைவேற்றும் வகையில் தூக்கிலிடும் பணியை செய்து முடிக்க யாரும் தற்போது இல்லை.
அந்த பணியில் இருந்த ஒருவர் கடந்த 2014-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றப்பிறகு மூன்று பேர் இந்த வேலைக்காக சேர்ந்தனர். ஆனால், அவர்களும் குறுகிய காலத்துக்குள் வேலையை விட்டு நின்று விட்டனர்.
எனவே, ஒருவேளை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா சிறையில் இருக்கும் கைதிகளில் சிலருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு திடீரென்று உத்தரவிட்டால் அந்த காரியத்தை செய்து முடிப்பதற்காக புதிய கொலையாளிகளை நியமிக்க இலங்கை சிறைத்துறை தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் இந்த பணிக்கான இருவரை தேர்வு செய்வதற்காக இன்று (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் அந்நாட்டின் சிறைத்துறை கமிஷனர் தனசிங்கே தெரிவித்துள்ளார்