முன்னாள் போராளிகளுக்கு ஆபத்து!
02 Feb,2019
வவுனியாவில் கடந்த வாரம் வைரவபுளியங்குளப்பகுதியில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் சின்னத்தைப் பயன்படுத்தி வெளியிடப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்தினால் முன்னாள் போராளிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கையாக அமைந்துள்ளதாக ஜனநாயகப் போராளிகளின் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து அவரிடம் இன்று (2) வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும்,
கடந்த 2009 ஆண்டிற்குப்பின்னர் விடுதலைப்புலிகளின் சகல செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விடுதலைப்புலிகளின் பெயரைப்பயன்படுத்தி சர்வதேச மட்டத்திலும், இலங்கைக்குள்ளும் ஏற்படுத்தப்படுகின்ற இந்த அநாவசியப் பிரச்சினைகள் மிக நீண்டகால அடிப்படையிலேயே மென்மேலும் இலங்கையை ஒரு பாரிய நெருக்கடிக்குள் தள்ளும் என நாம் நினைக்கின்றோம்.
எனவே இலங்கையில் புலனாய்வுத்துறை, சட்டத்துறை, நீதித்துறை இருக்கின்ற அந்த நிலைமையிலேயே இந்த வதந்திகளுக்கு பின்னணியிலிருப்பவர்களை இனங்காணுவது மிக இலகுவான விடயம். இங்கு நடைபெறுகின்ற ஒவ்வாரு சம்பவங்களையும் மிக ஆழமாக ஆராய்ந்து இலங்கையை மதிப்பு மிகுந்த நாடாக ஒரு சுதந்திர நாடாக சகல மக்களும் வாழக்கூடிய ஒரு நாடாக கொண்டு செல்லப்பட வேண்டியது அரசின் கடமை என்பதை நான் வலியுறுத்துகின்றேன் என்று மேலும் தெரிவித்துள்ளார்.