ஜெனிவாவில் வருகிறது புதிய நீடிப்பு பிரேரணை: இலங்கை எதிர்த்தால் வாக்கெடுப்பு நடத்தப்படும்
02 Feb,2019
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 22ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் மற்றுமொரு புதிய பிரேரணை கொண்டுவரப்படுவது உறுதியாகியுள்ளது.
கனடா, ஜேர்மன், பிரிட்டன் மெசடோனியா மற்றும் மொன்டனேக்ரோ ஆகிய ஐந்து நாடுகளே இம்முறை இலங்கை குறித்த பிரேரணையை கொண்வரவுள்ளன.
கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையுடன் கொண்டுவரபபட்டு நிறைவேற்றப்பட்டு பின்னர் 2017 ஆண்டு நீடிப்பு செய்யப்பட்ட அதே பிரேரணையே இம்முறையும் கொண்டுவரப்படுகின்றது. அதாவது இலங்கை மீதான மேற்பார்வையை மீண்டும் நீடிக்கும் வகையில் இந்த பிரேரணை தாக்கல் செய்யப்படவுள்ளது.
இம்முறை 40 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக நான்கு அறிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன. அதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாயகத்தின் இலங்கை குறித்த அறிக்கை முக்கியத்துவமிக்கதாகும்.
அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு மீண்டும் 2017 ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பிரேரணையை எவ்வாறு இலங்கை அமுல்படுத்தியது என்பது தொடர்பாகவே ஐக்கிய நாடுகள் ஆணையாளர் நாயகத்தின் அறிக்கை அமையவுள்ளது.
அந்த அறிக்கை மீதான விவாதம் எதிர்வரும் 20 ஆம் திகதி ஜெனிவா அமர்வில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கையின் சார்பில் வெ ளிவி்வகார அமைச்சர் பங்கேற்று இலங்கை ஏற்படுத்தியுள்ள முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்பபுகின்றது.
அதேபோன்று இம்முறை மேலும் மூன்று அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இலங்கையின் சார்பிலும் விபர அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிகின்றது. அத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்த இரண்டு ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர்களின் அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படவுள்ளன.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பயங்கரவாதத்தை எதிர்க்கும்போது மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட நிபுணரின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
அதேபோன்று கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்த வெ ளிநாட்டுக் கடன்கள் மற்றும் பொருளாதார சமூக கலாசார உரிமைகள் குறித்த விசேட நிபுணரின் அறிக்கையும் தாக்கல் செய்யப்படவுள்ளது
“இந்தக் கூட்டத் தொடரில் இலங்கையிலிருந்து பல்வேறு தரப்பினர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். அரசாங்கத் தரப்பில் அமைச்சு மட்டத் தூதுக்குழுவினர் கலந்துகொள்வார்கள். பெரும்பாலும் வெ ளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு பங்கேற்கும்
பாதிக்கப்பட்ட மக்கள் சார்பிலும் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். அவர்கள் தமக்கான நீதி தொடர்பில் ஜெனிவா வளாகத்தில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.
தென்னிலங்கையிலிருந்தும் பல்வேறு அமைப்புக்கள் இம்முறை ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளன. மேலும் மூன்று அறிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளன.
இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள மற்றுமொரு பிரேரணை குறித்த விவாதம் 21 ஆம் திகதி இடம்பெறும். அதாவது பிரேரணையை நிறைவேற்ற முற்படும்போது இந்த விவாதம் நடைபெறும். இதற்கு இலங்கை அனுசரணை வழங்கினால் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும். இலங்கை இணை அனுசரணை வழங்க மறுக்கும்பட்சத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படும்.
(R அன்டனி)