எதிர்க்கட்சித் தலைவர் பதவியோ தமிழருக்கு தேவையாகவுள்ளது
29 Jan,2019
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் மீண்டும் அந்தப் பதவியை பெறுவதற்காக குரல் கொடுக்கத் தலைப்பட்டுள்ளார்.அதற்காக அவர் சபாநாயகர் கரு ஜயசூரிய மீது குற்றம் சுமத்தவும் தலைப்பட்டுள்ளார்.
நடப்பில் உள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டிய இரண்டாவது நபர் சபாநாயகர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.இதை நாம் கூறும் போது அப்படியானால் முதல் நபர் யார் என்ற கேள்வி எழும். முதலாம் நபர் மீள் குடியேற்ற அமைச்சராகவிருந்த டி.எம்.சுவாமி நாதன் ஆவார்.
அவர் மீள்குடியேற்ற அமைச்சராகவிருந்த போது அவர் மீது கடும் குற்றச்சாட்டுக்களை கூட்டமைப்பினர் முன்வைத்தனர். இப்போது சபாநாயகர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொதுவில் தமிழர்கள் அமைச்சர்களாக அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தால் அவர்களை எதிர்ப்பதில் முதலிடத்தில் இருப்பவர்கள் தமிழ்ப்பிரதிநிதிகளாகவே இருப்பர்.
அந்தவகையில் டி.எம்.சுவாமிநாதன் மீதான கூட்டமைப்பின் எதிர்ப்பு மரபுவழிப்பட்டது. அப்படியானால் சபாநாயகர் மீதான எதிர்ப்பு எதற்கானது என்றால் எதிர்க்கட்சித்தலைவராக மகிந்த ராஜபக்இவே இருக்க முடியுமென சபாநாயகர் அறிவித்தமைதான்.
ரணில் விக்கிரமசிங்கவின் நம்பிக்கையை பாராளுமன்றத்தில் பல தடவைகள் நிரூபித்து அதனை ஜனாதிபதிக்கு அறிவித்துக்கொண்டே இருந்த காரணத்தால்தான் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.
அப்போதெல்லாம் மகிந்த ராஜபக்இ தரப்பு சபாநாயகரை திட்டித்தீர்க்க, ஐக்கிய தேசியக் கட்சியினரும் கூட்டமைப்பினரும் சபாநாயகர் நீதியாகச் செயற்படுகின்றார் எனப் புகழாரம் சூட்டினர்.
ஆனால் இப்போது மகிந்த ராஜபக்இதான் எதிர்க் கட்சித் தலைவராக இருக்க முடியுமென சபாநாயகர் அறிவிக்க, அதன்வழி இரா.சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார்.
பதவியை இழந்ததன் காரணமாக சபாநாயகர் மீது இரா.சம்பந்தர் குற்றஞ்சாட்ட தலைப்பட்டுள்ளார். இங்குதான் கூட்டமைப்பின் தலைவர் தனக்கான பதவி மீது ஆசை கொண்டு கதைக்க முற்பட்டுள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
இது சிங்கள மக்கள் மத்தியில் கூட்டமைப்புக்கு எதிரான கருத்துருவாக்கம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போது அது சட்டத்துக்கு முரணானது என்று நீதிமன்றம் சென்ற கூட்டமைப்பினர், இப்போது தங்களிடம் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நீக்கியமை சட்டத்துக்கு முரணானது என்றால்,
நீதிமன்றம் சென்று தங்களின் உரிமையை பெற்றுக்கொள்வதே புத்திசாலித்தனமானது. இதைவிடுத்து சபாநாயகரை குற்றஞ்சாட்டுவது என்பது விமர்சனத்தை ஏற்படுத்தக்கூடாது.
சரி, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்த சம்பந்தரும் அவர் தரப்பும் சபாநாயகர் மீது குற்றஞ் சாட்டும் அதேநேரம் இந்த நாட்டின் பிரதமரர் பாராளுமன்றத்தில் எழுந்து, சம்பந்தர் ஐயா! விடயத்தில் சபாநாயகர் நடந்து கொண்ட முறை தவறானது எனக் கூறாதது ஏன் என்றும் கேட்க வேண்டும் அல்லவா? அதை செய்யாத போது சபாநாயகரை நோக்கி குற்றஞ்சாட்டுவது எந்த வகையிலும் பொருத்துடையதன்று.