பொது முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அளிக்கப்பட்டது தொடர்பில், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தின் இன்று (25) கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தலைவராக ஜனாதிபதி இருக்கின்ற நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அதே கட்சி எவ்வாறு வகிக்க முடியுமெனவும், அவர் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில், அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் முழு வடிவம் வருமாறு,
“கௌரவ சபாநாயகர் அவர்களே,
“பொது முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் பின்வரும் கேள்விகளை எழுப்புவதற்கு தங்களது அனுமதியை வேண்டி நிற்கிறேன்.
“எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் நீங்கள் டிசம்பர் 18ம் திகதி 2018 அன்று பாராளுமன்றில் ஒரு அறிக்கையை கொடுத்திருந்தீர்கள். அந்த அறிக்கையில், பாராளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களை கொண்டுள்ளதாக கூறப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் அவர்கள் கௌரவ மஹிந்த ராஜபக்ச அவர்களை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்குமாறு கடிதம் மூலம் வேண்டியிருந்ததாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.
மேலும் பாராளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அந்த கோரிக்கையை நீங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தீர்கள்.
“சில கௌரவ உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பில் கேள்விகளை எழுப்பியிருந்தனர், அவற்றுள் முதலாவது, கேள்விக்கிடமின்றி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்றில் இரண்டாவது அதிகூடிய உறுப்பினர்களை கொண்டுள்ளபோதும், அரசாங்கத்தில் அவர்கள் ஒரு அங்கமாக இருப்பதன் காரணமாக, அந்த கட்சியை சேர்ந்த ஒருவர் எதிர்கட்சி தலைவர் பதவியினை வகிக்க முடியாது எனவும், இரண்டாவதாக, எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கௌரவ மஹிந்த ராஜபக்ச அவர்கள், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பின் உறுப்புரை 99 உப பிரிவு 13 அ வின் பிரகாரம், தேர்தலின் போது அவரது பெயரை முன்மொழிந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து விலகி முற்றிலும் வேறுபட்ட பொதுஜன பெரமுன அரசியல் கட்சியின் அங்கத்துவத்தினை பெற்றுள்ளார்,
அவ்வாறு அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து விலகி 30 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவரது பாராளுமன்ற உறுப்பு ரிமையும் இரத்தாகியுள்ளது,
எனவே அவர் எதிர்கட்சி தலைவராக இருக்கு முடியாது என்பவையாகும், இந்த கேள்விகளுக்கு நீங்கள் பிறிதொரு நாளில் பதில் தருவதாக குறிப்பிட்டிருந்தீர்கள்.
“இது தொடர்பில் டிசம்பர் 19 2018 அன்று பாராளுமன்றில் நான் பேசியிருந்தேன், எனது உரையிலே மேற்குறிப்பிட்ட இரண்டு விடயங்கள் தொடர்பிலும் நான் குறிப்பிட்டிருந்தேன்.
மேலும் அந்த உரையில்,பாராளுமன்றத்தில் எதிர்கட்சியிலுள்ள இரண்டாவது பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரான என்னை செப்டம்பர் 2015ல் நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரித்ததனையும், மேலும் பாராளுமன்றத்தில் எதிர்கட்சியிலுள்ள இரண்டாவது பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரான என்னை ஆகஸ்ட் 2018ல் மீண்டுமொருமுறை எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரித்திருந்தமையையும் குறிப்பிட்டிருந்தேன்.
இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் பாராளுமன்றின் எதிர்க்கட்சியிலுள்ள அதிக உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்திலும் அங்கம் வகித்திருந்த காரணத்தினால்தான் பாராளுமன்றில் எதிர்க்கட்சியில் இராண்டாவது பெரும்பான்மை கட்சியின் தலைவரை எதிர்க்கட்சி தலைவராக நீங்கள் அங்கீகரித்திருந்தீர்கள்.
“உங்கள் சார்பில் கௌரவ பிரதி சபாநாயகர் அவர்கள் ஜனவரி 8ம் திகதியன்று பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.மேற்குறித்த விடயம் தொடர்பில் தங்களது நிலைப்பாட்டினை அவர் அறிவித்திருந்தார்.
அந்த அறிக்கையிலே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதினால் எதிர்க்கட்சி தலைவர் பதவியினை வகிப்பதற்கு தகுதியற்றது என்பது தொடர்பில் எவ்வித குறிப்பும் காணப்படவில்லை.
ஆகையினாலே, பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியில் இரண்டாவது பெரும்பான்மை கொண்ட கட்சியின் தலைவரான என்னை இரண்டுமுறை முதலாவது செப்டம்பர் 2015 இரண்டாவது ஆகஸ்ட் 2018 ஆகிய தடவைகளில் எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரித்தமைக்கான மிக முக்கிய காரணம் தொடர்பில் கவனம் செலுத்துவதில் நீங்கள் தவறிழைத்துள்ளீர்கள்
“மேற்குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு விடயங்கள் தொடர்பிலும் தங்களது தகவலிற்காகவும் தேவையான நடவடிக்கைகளிற்காகவும் பின்வரும் விடயங்களை குறிப்பிடுவது எனது கடமை என நான் கருதுகிறேன்.
“இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் யாப்பின் 30வது உறுப்புரைக்கமைய குடியரசின் ஜனாதிபதி அவர்கள் நாட்டின் தலைவராகவும், நிறைவேற்று தலைவராகவும்,அரசாங்கத்தின் தலைவராகவும்,இருக்கிறார்.
“இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் யாப்பின் உறுப்புரை 42 உப பிரிவு 1,2,மற்றும் 3 ன் பிரகாரம்,
“குடியரசு அரசாங்கத்தினை வழிநடத்துவதற்காகவும் கட்டுப்படுத்துவதற்காகவும் ஒரு அமைச்சரவை இருத்தல் வேண்டும்.
“அமைச்சரவை அமைச்சர்கள் கூட்டாக பாராளுமன்றிக்கு பொறுப்புகூறவும் பதிலளிக்கவும் வேண்டும். ஜனாதிபதி அவர்கள் அமைச்சரவையின் அங்கத்தவராகவும் அமைச்சரவையின் தலைவராகவும் காணப்படுவார்.
“மேலே 5வது பந்தியிலே குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளின் அடிப்படையில், குடியரசின் ஜனாதிபதி அவர்கள் நிறைவேற்று தலைவராகவும், அரசாங்கத்தின் தலைவராகவும், அமைச்சரவை அங்கத்தவராகவும், அமைச்சரவையின் தலைவராகவும் காணப்படுகின்றார் என்பதனை நீங்கள் கண்டுகொள்ளலாம்,
ஜனாதிபதி அங்கத்தவராகவும் தலைவராகவும் உள்ள அமைச்சரவையானது கூட்டாக பாராளுமன்றத்திற்கு பொறுப்பும் பதிலும் கூறவேண்டிய ஒன்றாகவும் காணப்படுகின்றது.
மேலும் அரசியல் யாப்பின் 19வது திருத்தச் சட்டத்தின் 51வது உறுப்புரையின் பிரகாரம்,தற்போதைய ஜனாதிபதி அவர் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரையில், பாதுகாப்பு,மகாவலி அபிவிருத்தி,மற்றும் சுற்றாடல் போன்றவற்றின் விடயங்களையும் செயற்பாடுகளையும் தனக்கு நியமித்துக்கொள்ள முடியும்,
அதைப்போன்றே இது தொடர்பிலான அமைச்சுக்களையும் தீர்மானித்து தன்னகத்தே வைத்துக்கொள்ள முடியும்.ஜனாதிபதி அவர்கள் தனது சொந்த விருப்பத்தின்பேரில் பாதுகாப்பு,மகாவலி அபிவிருத்தி,சுற்றாடல் போன்றவற்றின் விடயங்களையும், செயற்பாடுகளையும்,தனக்கு நியமித்துக் கொண்டுள்ளார்.இது தவிர மேலும் சில விடயங்களையும் செயற்பாடுகளையும் ஜனாதிபதி அவர்கள் தனக்கு நியமித்துள்ளார்.
“ஜனாதிபதி அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் அதன் பங்காளி கட்சியான இலங்கை சுதந்திர கட்சி ஆகியவற்றின் தலைவராவார்.
எனவே, தற்போதைய இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி அவர்கள்,பல்வேறு அமைச்சு பதவிகளை வகிக்கும் அமைச்சராகவும்,அமைச்சரவையின் தலைவராகவும்,நிறைவேற்றின் தலைவராகவும், அரசாங்கத்தின் தலைவராகவும் அமைச்சரவையின் அங்கத்தவராக இருக்கின்ற காரணத்தினால் கூட்டாக பாராளுமன்றத்திற்கு பதிலும் பொறுப்பும் கூறவேண்டிய ஒருவராக இருக்கின்ற அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவராகவும்,அதன் பங்காளி கட்சியான இலங்கை சுதந்திர கட்சியின் தலைவராகவும் திகழ்கிறார்.
“எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கௌரவ மஹிந்த ராஜபக்ச அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் அதன் பங்காளிக்கட்சியான இலங்கை சுதந்திர கட்சியின் மிக முக்கியமான உறுப்பினராவார். மேலும் அவரை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கும்படியான கோரிக்கையை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளரே கோரியிருந்தார்.
“எனவே,ஜனாதிபதி அவர்கள் நிறைவேற்றின் தலைவராகவும்,அரசாங்கத்தின் தலைவராகவும்,பல்வேறு அமைச்சு பதவிகளை வகிக்கும் அமைச்சரவையின் அங்கத்தவராகவும் அந்த அமைச்சரவையின் தலைவராகவும் இருக்கும் அதேவேளை அவரும் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கும்படிக்கு கோரப்பட்ட கௌரவ மஹிந்த ராஜபக்ச அவர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினதும் அதன் பங்காளிக்கட்சியான இலங்கை சுதந்திர கட்சியின் அங்கத்தவர்களாக இருப்பதனை நீங்கள் விளங்கிக்கொள்வீர்கள்
“எனவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதியின் கடமைகள் செயற்பாடுகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவராக கௌரவ மஹிந்த ராஜபக்ச அவர்களின் கடமைகள் செயற்பாடுகளிற்கிடையில் மிக தெளிவான முரண்பாடு காணப்படுகின்றமையை நீங்கள் கண்டுகொள்ளலாம்.
அவர்கள் இருவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினதும் மற்றும் அதன் பங்காளி கட்சியான இலங்கை சுதந்திர கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களாவார்கள்.
இந்த பின்னணியில், நாட்டின் முன்னணி சட்ட மேதைகளில் ஒருவரான கலாநிதி, நிஹால் ஜெயவிக்ரம ஞாயிற்று கிழமை ஜனவரி 6ம் திகதி 2019ல் ஐலண்ட் பத்திரிகையில் எழுதிய கட்டுரையை மேற்க்கோள் காட்ட விரும்புகிறேன, அவர் பின்வருமாறு கூறுகிறார் “அரசியல் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதி அவர்கள் அரசாங்கத்தின் தலைவராவார்.
அவரின் சொந்த விருப்பின் அடிப்படையில், மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஒரே சிந்தனையை உடைய இலங்கை சுதந்திர கட்சியி உள்ளடங்கலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் இலங்கை சுதந்திர கட்சி ஆகியவற்றின் தலைவராக இருக்கின்றார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் இலங்கை சுதந்திர கட்சி ஆகியவற்றின் உறுப்பினராக தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் மஹிந்த ராஜபக்ச அவர்கள் இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார்.
ஆகவே, ஜனாதிபதி அவர்கள் எவ்வாறு ஒரே நேரத்தில் அரசாங்கத்தின் தலைவராகவும் எதிர்கட்சியின் தலைவராகவும் செயற்பட முடியும் அவர் அவ்வாறு செயற்படுவதானது அரசியல் யாப்பிலே குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை ஜனநாயக பண்பினை மீறும் செயலாகும் என்பதனையும் குறித்து பாராளுமன்றம் ஜனாதிபதி அவர்களிடம் விளக்கம் கேட்ட வேண்டும்” கலாநிதி நிஹால் ஜெயவிக்ரம அவர்களின் இந்த கூற்றானது இங்குள்ள முரண்பாட்டினை தெளிவாக காட்டுகின்றது.
கௌரவ மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவராக இல்லாவிட்டால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. அந்த அங்கீகாரத்தினை நீங்களே அவருக்கு வழங்கியிருந்தீர்கள்.
“முன்னாள் ஜனாதிபதிகளின் காலங்களிலும் இப்படியான சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளதாக காட்டும் முயற்சியொன்றும் இடம்பெறுகின்றது.இத்தகைய கேள்வி இதற்கு முன்பு எழுப்பப்படவில்லையென்பதனையும், இத்தகைய கேள்விக்கு எந்தவொரு சபாநாயகராலும் தீர்ப்பொன்று கொடுக்கப்படவில்லை என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தற்போது இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது, இதற்க்கு அரசியல் யாப்பின் பிரகாரமும்,ஏற்றுக்கொள்ளப்பட்ட பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் பிரகடனங்களின் அடிப்படையிலும் அரசாங்கத்தின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் தலைவர் ஆகிய பதவிகளில் காணப்படும் முரண்பாடுகளையும் கருத்திற்கொண்டு ஒரு தீர்வு காணப்பட வேண்டும்.
“இந்த பின்னணியில், பாராளுமன்ற நடைமுறைகள் குறித்த “எர்ஸ்கின் மே” 24ம் பதிப்பின் 334 மற்றும் 335 ம் பக்கங்களில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் நேரம் தொடர்பிலும் அத்தகைய நேரத்தினை யார் தீர்மானிப்பது என்பது தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது, அதனை நான் இங்கே குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன்.”
“நிலையியற் கட்டளை 14ன் பிரகாரம், 20 நாட்கள் அமர்வுகளில் ஒவ்வொரு அமர்விலும் எதிர்கட்சியினால் தெரிவு செய்யப்படும் விடயங்கள் அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்படும் விடயங்களை விட முன்னுரிமை பெறும்” மேலும் “17 நாட்கள் எதிர்கட்சி தலைவராலும் 3 நாட்கள் எதிர்க்கட்சியில் இரண்டாவது பெரும்பான்மையை கொண்ட கட்சியின் தலைவராலும் தீர்மானிக்கப்படும்.” இது அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரும்பான்மை அங்கத்தவர்களை கொண்ட கட்சியாக இருக்க வேண்டும் என நிலையியற் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்குறித்த காரணங்களின் அடிப்படியில் எதிர்க்கட்சியாக தெரிவு செய்யப்படும் கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முடியாது என்பது வெளிப்படையாக தெரிகிறது.
மேலும் நான் மேலே குறிப்பிட்டுள்ள விடயங்களின் அடிப்படியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றது. அதேவேளை எதிர்க்கட்சியில் இரண்டாம் பெரும்பான்மையை கொண்டுள்ள கட்சிக்கு கொடுக்கப்படவேண்டிய முக்கியத்துவத்தினையும் இது வலியுறுத்துகிறது,
அந்த நிலையில் இலங்கை தமிழ் அரசு கட்சி/தமிழ் தேசிய கூட்டமைப்பே எமது பாராளுமன்றத்தில் உள்ளது. இச்சந்தர்ப்பத்தில் எமது பாராளுமன்றத்தின் (அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்) சட்டம் 8ம் பிரிவில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஐக்கிய இராஜ்ய பாராளுமன்றத்தின் குறிப்புகளோ , அல்லது அச்சபையின் நடவடிக்கைகளோ,அல்லது அச்சபையின் குழுவொன்றின் அறிக்கையோ முதல்தோற்ற அளவிலான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். ஐக்கிய இராஜ்ய பாராளுமன்றத்தின் நடைமுறைகள் எமக்கும் தொடர்புடையதாக இருக்கின்றது என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
“மேலும் ஐ.ம.சு.கூ.பின் தேர்தல் பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவான பல ஐ.ம.சு.கூ. மற்றும் அதன் பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் ஆளும் தரப்பிற்கு மாறி இன்று அரசாங்க ஆசனங்களில் அரசாங்கத்தினை பிரதிநிதித்திடுவப்படுத்துகிறார்கள் என்பது மறுக்கப்பட முடியாத ஒன்றாகும்.
இந்த நிலைமை ஐ.ம.சு.கூ.ப்பும் அதன் பங்காளிக்கட்சியான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றது என்பதனை உறுதி செய்யும் அதேவேளை, ஐ.ம.சு.கூ.மற்றும் அதன் பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றின் உறுப்பினரும் ஐ.ம.சு.கூ.செயலாளரினால் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு பிரேரிக்கப்பட்டவருமான கௌரவ.மஹிந்த ராஜபக்ச அவர்கள் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவராவார் என்பதனையும் தெளிவாக காட்டுகின்றது
“இரண்டாவது பிரச்சினை பின்வரும் விடயம் தொடர்பிலாகும், கௌரவ மஹிந்த ராஜபக்ச அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட வேளை அவரது பெயர் பிரேரிக்கப்பட்டிருந்த கட்சியின் அங்கத்துவத்தினை இழந்துள்ளதன் விளைவுகள் மற்றும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு யாப்பின் உறுப்புரை 99 உப பிரிவு 13 அ வின் பிரகார மும் இது தொடர்பில் அந்த பிரிவில் உள்ளடக்கியுள்ள விடயங்களின் தாக்கம் போன்றவை தொடர்பானவையாகும், நீங்கள் ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் ஒரு தீர்ப்பினை கொடுத்துள்ளதால் இந்த அறிக்கையில் இதனை நான் கையாளவில்லை என்பதனை பணிவாக தெரிவித்து கொள்கிறேன்.
“எனினும் இந்த விடயம் இன்னமும் தீர்க்கப்படவில்லை என்பதனையும் இந்த விடயம் தொடர்பிலான ஒரு தீர்க்கமான முடிவு சரியான இடத்தில எட்டப்பட வேண்டும் என்பதனையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்
“இந்த விடயம் தொடர்பில் உண்மை நிலைநாட்டப்படவேண்டும் என்பதோடு,இந்த நாட்டின் அதி உயர் சட்டமான அரசியல் சாசனமும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு கொடுக்கப்பட்டுள்ள உள்ளீடுகளும் தனி நபர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சூழ்ச்சிகரமாக மாற்றியமைப்பதற்கோ திசை திருப்புவதற்கோ இடமளிக்கமுடியாது.
அத்தகைய நடவடிக்கையொன்றுக்கு துணைபோவதென்பது அரசியல் யாப்பின் புனித தன்மையை மறுக்கும் செயலாகவே பார்க்கப்படும் எனவே அரசியல் யாப்பும் அதன் நடைமுறைகளும் பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் சாசனங்கள் என்பன முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதனை உறுதி செய்து கொள்வதற்கான இந்த காரணங்களை பதிவு செய்வது எனது கடமையாக கருதுகிறேன்.
“மேலும் நானோ அல்லது இலங்கை தமிழ் அரசு கட்சி/தமிழ் தேசிய கூட்டமைப்போ பதவி ஆசை பிடித்தவர்கள் அல்ல என்பதனை மிக தெளிவாக கூறி வைக்க விரும்புகிறேன்.
நாங்கள் ஒருபோதும் பதவிகளை நாடினவர்கள் அல்ல. எமக்கு பாராளுமன்றத்தில் ஆறு வருடங்கள் இருக்கின்ற சந்தர்ப்பம் இருந்த போதும் 1983 ம் ஆண்டு கொள்கையின் நிமித்தம் நாங்கள் சத்தியப்பிரமாணம் செய்ய மறுத்த காரணத்தினால் தமிழர் விடுதலை கூட்டணியை சேர்ந்த 16 பேர் எமது பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தோம்.
16பேரில் முதலாவதாக உறுப்புரிமையை இழந்தவன் நான். பொது மக்கள் அறிந்திருக்கின்ற பிரகாரம் மேலும் பல தடவைகளில் நாங்கள் பதவிகளை ஏற்க மறுத்துள்ளோம்.
ஆனால் பேரினவாதத்தினை விதைக்கும் ஒரு சிலரின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அரசியல் யாப்பினையோ ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் சாசன நடைமுறைகளையோ சாசனங்களையோ திரிவுபடுத்தி திசை திருப்புவதன் மூலம் சிறுபான்மை கட்சிகளினதும் சிறுபான்மை மக்களினதும் உரிமைகள் பாதிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும் அரசியல் சாசனத்தில் சிறுபான்மை கட்சிகளிற்கும் சிறுபான்மை மக்களிற்கும் உள்ள உரித்தானது பாதுகாக்கப்பட்டு பேணப்பட வேண்டும். ஆயினாலேதான், கௌரவ சபாநாயகர் அவர்களே இந்த அறிக்கையை நான் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது இன்றியமையாதது என கருதுகிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.