தமிழர்கள் தனித்துவத்தை பேண எத்தனிப்பது பிழை என்று சொன்ன பிரித்தானிய ராஜதந்திரிகளுக்கு பாடம் புகட்டி அனுப்பிய விக்னேஸ்வரன்
25 Jan,2019
பிரித்தானியாவின் தென்னாசிய திணைக்களத் தலைவரும் மேலும் இந்திய ஒருங்கமைப்பாளரும் ஆகிய ஃபேர்கஸ் ஒளல்ட், இலங்கையின் உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் முதல்செயலாளர் போல் ஃகிறீன், அலுவலர் ஜோவிடா அருளாநந்தம் ஆகியோர் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை இன்று (24.01.2019) காலை 11.45 மணியளவில் நீதியரசரின் வாசஸ்தலத்தில் சந்தித்தனர் .
இந்த சந்திப்பின்போது பிரித்தானிய ராஜதந்திரிகள் தமிழ் மக்களின் அரசியல் தொடர்பில் தெரிவித்த சில கருத்துக்களுடன் உடன்பட மறுத்த விக்னேஸ்வரன் அவர்களுடன் தர்க்கம் செய்தார்.
பிரித்தானியாவில் பல நாடுகளில் இருந்தும் மக்கள் தம் நாட்டுக்கு வந்து தம்முடைய வாழ்க்கையுடன் ஒன்றிணைந்து ஒற்றுமையாக நாட்டை முன்னேற்றிச் செல்வதாக கருத்து கூறியதுடன் தனித்துவத்தை நீங்கள் பேண எத்தனிப்பது சரியான ஒரு விடயம் என்று தமக்குப் படுவதாகத் தெரியவில்லை என்று ஃபேர்கஸ் கருத்து கூறியபோது அதற்குப் பதில் அளித்த முன்னாள் முதலமைச்சர் வெளிநாடுகளில் இருந்து எத்தனைபேர் வந்தாலும் நாட்டின் அதிகாரம் பிரித்தானிய நாட்டு மக்களின் கைகளிலேயே அமைந்துள்ளது என்றும் ஒரு நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் மற்றவர்கள் இணைந்து செயற்படுவது வேறு தம் நாட்டிலேயே இரண்டாந் தரப் பிரஜைகளாகத் தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலை வேறு என்றும் கூறினார். அதற்கு திரு ஃபேர்கஸ் அவர்கள் பிரித்தானியாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இவ்வாறான வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், உதாரணமாகத் தமிழர்கள், பெரும் பங்காற்றி வருகின்றார்கள் என்றும்; ஏன் அதேவாறு தமிழ் மக்களும் நாட்டின் அரசியல் நீரோட்டத்தினுள் நுழைந்து பங்காற்ற முடியாது என்றும் கேட்டார். அதற்கு முன்னைய முதலமைச்சர் அவர்கள் ‘எம் நாட்டிலேயே எம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கிவிட்டு எம்மை நாட்டின் அரசியல் நீரோட்டத்துடன் சேரச் சொல்வது முறையானதாக எனக்குப்படவில்லை. கிணற்றின் உள்ளே ஒருவரை வைத்துக் கொண்டு கிணற்றுக்கு வெளியே மற்றொருவர் நின்று கொண்டு ஏன் என்னோடு ஒருமித்து செயற்பட மறுக்கின்றீர்கள் என்று கேட்பது போல் இருக்கின்றது உங்கள் கேள்வி’ என்று கூறினார்.
இந்த சந்திப்பு தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது:
பிரித்தானியாவின் தென்னாசிய திணைக்களத் தலைவரும் மேலும் இந்திய ஒருங்கமைப்பாளரும் ஆகிய ஃபேர்கஸ் ஒளல்ட் என்பவர் இலங்கையின் உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் முதல்செயலாளர் போல் ஃகிறீன் அவர்களுடனும் அலுவலர் ஜோவிடா அருளாநந்தம் அவர்களுடனும் முன்னைய முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களை இன்று (24.01.2019) காலை 11.45 மணியளவில் நீதியரசரின் வாசஸ்தலத்தில் சந்தித்தார்.
அண்மையில் ஒரு புதிய அரசியல் கட்சியை நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் தொடங்கியதாகத் தாம் அறிந்து கொண்டதாகவும் அதற்கான காரணம் என்னவென்றும் அவர் முன்னைய முதலமைச்சரிடம் கேட்டார். அதற்கு நீதியரசர் அவர்கள் மக்களிடம் வாக்குப் பெறச் செல்லும் போது சில முக்கியமான அடிப்படை விடயங்களைப் பெற்றுத் தருவதாக மக்களிடம் கூறி வாக்குப் பெற்று விட்டு அவை சம்பந்தமாக அரசாங்கத்துடன் கருத்துப் பரிமாற்றம் செய்யாது மிகவும் குறைந்த அளவு சில உரிமைகளைப் பெற இன்றைய தமிழ்த் தலைவர்கள் முயன்றுள்ளதால் அதை மக்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும் தமது முதுமையின் போது இவ்வாறான ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிப்பது என்பது சாதாரண விடயம் அன்று என்றும் எனினும் நடைபெறும் விடயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லா விட்டால் 2000 வருடங்களுக்கு மேலான தமிழ் மக்களின் பாரம்பரியமானது ஒரு சில வருடங்களில் இல்லாதொழிக்கப்படும் என்றும் கூறினார்.
இதற்கு திரு ஃபேர்கஸ் அவர்கள் பிரித்தானியாவில் பல நாடுகளில் இருந்தும் மக்கள் தம் நாட்டுக்கு வந்து தம்முடைய வாழ்க்கையுடன் ஒன்றிணைந்து ஒற்றுமையாக நாட்டை முன்னேற்றிச் செல்வதாக கருத்து கூறியதுடன் தனித்துவத்தை நீங்கள் பேண எத்தனிப்பது சரியான ஒரு விடயம் என்று தமக்குப் படுவதாகத் தெரியவில்லை என்று கூறினார். அதற்குப் பதில் அளித்த முன்னாள் முதலமைச்சர் வெளிநாடுகளில் இருந்து எத்தனைபேர் வந்தாலும் நாட்டின் அதிகாரம் பிரித்தானிய நாட்டு மக்களின் கைகளிலேயே அமைந்துள்ளது என்றும் ஒரு நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் மற்றவர்கள் இணைந்து செயற்படுவது வேறு தம் நாட்டிலேயே இரண்டாந் தரப் பிரஜைகளாகத் தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலை வேறு என்றும் கூறினார். அதற்கு திரு ஃபேர்கஸ் அவர்கள் பிரித்தானியாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இவ்வாறான வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், உதாரணமாகத் தமிழர்கள், பெரும் பங்காற்றி வருகின்றார்கள் என்றும்; ஏன் அதேவாறு தமிழ் மக்களும் நாட்டின் அரசியல் நீரோட்டத்தினுள் நுழைந்து பங்காற்ற முடியாது என்றும் கேட்டார்.
அதற்கு முன்னைய முதலமைச்சர் அவர்கள் ‘எம் நாட்டிலேயே எம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கிவிட்டு எம்மை நாட்டின் அரசியல் நீரோட்டத்துடன் சேரச் சொல்வது முறையானதாக எனக்குப்படவில்லை. கிணற்றின் உள்ளே ஒருவரை வைத்துக் கொண்டு கிணற்றுக்கு வெளியே மற்றொருவர் நின்று கொண்டு ஏன் என்னோடு ஒருமித்து செயற்பட மறுக்கின்றீர்கள் என்று கேட்பது போல் இருக்கின்றது உங்கள் கேள்வி’ என்று கூறினார்.
மேலும், தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகள் திரும்பவும் கையளிக்கப்பட்டதன் பின்னர் நீங்கள் கூறுவது போல் எம்மாலும் நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார நீரோட்டத்தினுள் உள்ளீர்க்கப்பட்டு செயலாற்ற முடியும் என்றும் கூறினார். ஆனால் முதலில் எங்களைக் கிணற்றினுள் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்று கூறினார். இராணுவத்தை வைத்துக் கொண்டு பக்கச்சார்பான சட்டங்களை வைத்துக் கொண்டு தமிழ் மக்களை அடிமைப்படுத்திக் கொண்டு தமது அரசியல் நீரோட்டத்தினுள் சேருமாறு சிங்கள அரசியல் தலைவர்கள் கோரினார்களேயாகில் அது சமத்துவ அடிப்படையிலான கோரிக்கை அன்று என்று விளக்கினார். எமது உரிமைகளை அரசாங்கம் தந்த பின்னர் நாம் மத்திய அரசாங்கத்துடன் சேர்ந்து செயலாற்ற முடியும். ஆனால் முதலில் எமது தமிழ்ப் பேசும் பிரதேசங்களான வடகிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டும். சர்வதேச சட்டத்தின் கீழ் உள்நாட்டு சுயநிர்ணய உரிமை எமக்கு இருப்பதை அரசாங்கம் ஏற்றுக்;கொள்ள வேண்டும். மேலும் தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் வடகிழக்கு மாகாணங்களுக்கு சமஷ்டி முறையிலான ஒரு தீர்வை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றத்தின் இறுதியில், ‘உங்கள் மக்களின் உரிமைகளுக்காக நீங்கள் போராடுவதாக இருந்தால் அதனை நான் பாராட்டுகின்றேன். உங்கள் எண்ணங்கள் ஈடேற வாழ்த்துகின்றேன்’ என்று கூறி சந்திப்பை முடித்துக் கொண்டார் கௌரவ ஃபேர்கஸ் அவர்கள். இன்று மத்தியானமே இரயிலில் கொழும்புக்குப் பிரயாணம் செய்வதாகக் கூறினார்.