தொடங்குகிறது அற்புதத்தின் அறப் பயணம்! – 7 பேர் விடுதலை..என்ன நடந்தது இதுவரை?
24 Jan,2019
உடம்பு பயணத்துக்கு ஒத்துழைக்கலை ஆனா எம்புள்ளைய எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வர வேற வழி தெரியலை! மக்களிடமே நியாயம் கேட்கப் போறேன்” என்கிறார் அற்புதம் அம்மாள். 28 வருடங்களாக தனது பிள்ளைக்காக ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் அற்புதத்தின் கால்களுக்கு ஓய்வு கொடுக்க மக்கள் குரலும் வலுசேர்க்கட்டும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேரைச் சிறையில் அடைத்து 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மகனுக்கு நீதி கேட்க அறப் பயணம் தொடங்கியிருக்கிறார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பெல்ட் பாம் தயாரிக்க பேட்டரி கொடுத்து உதவியதாக, 1991-ம் ஆண்டு ஜூன் 11ல், சென்னைப் பெரியார் திடலில் கைது செய்யப்பட்டவர் பேரறிவாளன்.
`சின்ன விசாரணைக்காக அழைத்துச் செல்வதாகச்’ சொல்லப்பட்டது. வரும் 11 ஜீன் 2019 அன்று, பேரறிவாளன் உள்பட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டு 28 வருடங்கள் நிறைவடைகின்றன.
இத்தனை வருடங்களாகத் தன் மகனுக்காகத் தொடர்ந்து நீதிமன்றத்தின் கதவுகளை அறவழியில் தட்டிக் கொண்டிருக்கிறார் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்.
இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதிகாரி, நீதிபதிகள் உட்பட அனைவருமே பேரறிவாளன் விடுதலைக்காகக் குரல் கொடுத்தனர்.
`7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநரே முடிவெடுக்கலாம்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகு 100 நாள்களுக்கும் மேல் கடந்துவிட்ட போதிலும், `சட்டப்படி நியாயமான முறையில் பதிலளிக்கப்படும்’ என்று அறிக்கைவிட்ட ஆளுநர் மாளிகை அதன் பின்னர் தொடர்ந்து மௌனம் கடைபிடிக்கிறது.
வேறு எந்த ஆயுள் கைதிகளுக்கும் உள்ள உரிமைகள்கூட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன.
அற்புதம்மாள் தமிழகம் புதுச்சேரி பயணம்
தன் மகனின் விடுதலைக்காக, சென்னைத் தலைமைச் செயலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.
இந்த நிலையில்தான், உடல்நலக்குறைவால் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் தன் தந்தையைப் பேரறிவாளன் பார்ப்பதற்கு அனுமதி அளித்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது.
அதன் பின்னர், நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி ஆளுநருக்குத் தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்தே, ஆளுநரையும் அற்புதம்மாள் சந்தித்து, அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டார். ஆனால், இப்போதுவரை ஆளுநரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. மத்திய அரசின் உத்தரவுக்காக ஆளுநர் காத்திருக்கக்கூடும் என்று தெரிய வந்துள்ளது.
`பொங்கல் மட்டும்தான் எங்க வீட்டுல கொண்டாடுவோம். இந்த வருடப் பொங்கலுக்காவது என் பிள்ளை அறிவு வீட்டுக்கு வந்துருவான்’ என்று எதிர்பார்த்துக் காத்திருந்த அற்புதம்மாளுக்கு இந்த வருடமும் விரக்தியே மிச்சம். “இனி மக்களிடமே நியாயத்தைக் கேட்கிறேன்!” என்று புறப்பட்டிருக்கிறார் அவர்.
வரும் ஜனவரி 24 (வியாழன்) கோவையில் தொடங்கி தமிழகம், புதுச்சேரி எனத் தன்னுடைய மகனின் விடுதலைக்காகத் தொடர்ந்து பயணிக்க இருக்கிறார்.
28 வருடங்கள் நிறைவடைய இருக்கும் நிலையில் இந்த விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன?
அற்புதம்மாள்
தன் பயணத் திட்டம் குறித்து அற்புதம்மாள் பேசுகையில் `இந்தப் பயணத்திற்கு உடம்பு சுத்தமாகப் பயணத்துக்கு ஒத்துழைக்கவில்லை. ஆனா, எம்புள்ளைய எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வருவதற்கு எனக்கு வேற வழி தெரியலை.
ஆளுநர் இன்னும் மௌனமாவே இருக்காரு. அதான் மக்களிடமே நியாயம் கேட்கப் போறேன்” என்கிறார். 28 வருடங்களாக தன் பிள்ளைக்காக ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் அற்புதத்தின் கால்களுக்கு ஓய்வு கொடுக்க, அவரின் அறப் பயணம் வெற்றிபெற்று, ஒட்டுமொத்த மக்கள் குரலும் வலுசேர்க்கட்டும்.
தன் பயணத் திட்டம் குறித்து அற்புதம்மாள் பேசுகையில் `இந்தப் பயணத்திற்கு உடம்பு சுத்தமாகப் பயணத்துக்கு ஒத்துழைக்கவில்லை. ஆனா, எம்புள்ளைய எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வருவதற்கு எனக்கு வேற வழி தெரியலை.
ஆளுநர் இன்னும் மௌனமாவே இருக்காரு. அதான் மக்களிடமே நியாயம் கேட்கப் போறேன்” என்கிறார். 28 வருடங்களாக தன் பிள்ளைக்காக ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் அற்புதத்தின் கால்களுக்கு ஓய்வு கொடுக்க, அவரின் அறப் பயணம் வெற்றிபெற்று, ஒட்டுமொத்த மக்கள் குரலும் வலுசேர்க்கட்டும்.