278 எலும்புக்கூடுகள் காணாமல் போனவர்களின் எச்சங்களா ?
29 Dec,2018
மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படும் எச்சங்களை புலனாய்வு செய்வதற்கு எமது அலுவலகம் உதவிவருவது தவிர்க்க முடியாததொன்றாகும் என காணாமல்போனோர் அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
காணாமல்போனோர் தொடர்பான தகவல்களை சேகரித்துவரும் காணாமல்போனோர் அலுவலகம் தற்போது மன்னார் மனிதப்புதைகுழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வு மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு நிதியுதவிகளை வழங்கி வருகின்றது. இந்நிலையில் அவ்வலுவலகம் மன்னார் மனிதப்புதைகுழி விவகாரம் குறித்து தாம் அவதானம் செலுத்தியுள்ளமை தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மன்னார் மனிதப்புதைகுழி விவகாரத்தில் புலனாய்வுப் பிரிவிற்குத் தலைமை தாங்கும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட மருத்துவ ஆலோசனை அதிகாரி இராஜபக்ஷ இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கையில்,
118 வேலைநாட்கள் பணியின் பின்னர் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரது 278 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. சில எலும்புகளின் சிதைவுகள் காணப்படுகின்றன.
எனினும் மேலதிக புலனாய்வின் பின்னரே இச்சிதைவுகள் மரணத்தின் பின்னர் ஏற்பட்டவையா அல்லது மரணத்திற்கு முன்னர் ஏற்பட்டவையா என்றும், அவை மரணத்திற்கு காரணமாக அமைந்தனவா என்றும் தீர்மானிக்க முடியும்.
எமது ஆய்வுப் பணிகள் இந்த எலும்புக் கூடுகளுக்குரிய மனிதர்களின் மரணத்திற்கான காரணம், மரணம் நிகழ்ந்த பின்னரான காலப்பகுதி, மரணம் நிகழ்ந்ததற்கான சூழல் பின்னணி, மரணித்துள்ள நபர்களின் அடையாளங்கள் மற்றும் அனைத்து எலும்புக்கூடுகளும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவையா, இல்லையா உள்ளிட்ட பல தகவல்களையும் அறிந்து கொள்வதனை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதேவேளை இவ்விடயம் தொடர்பான இரகசிய தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்பதுடன், பரிசோதனைக்குரிய எலும்பு மாதிரிகள் பாதுகாக்கப்படும் அலுவலக இணைப்பு முறைமை மற்றும் இதர சான்றுகள் என்பனவும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.