7 மாவட்டங்களில் 23265 குடும்பங்கள் பாதிப்பு, ஒருவர் மரணம் சுனாமி நினைவுதினம்நேற்று அனுஷ்டிப்பு
26 Dec,2018
நாட்டிலுள்ள ஏழு மாவட்டங்களில் நிலவி வரும் அசாதாரண காலநிலையினால் நேற்று (25) வரையில் 23265 குடும்பங்களைச் சேர்ந்த 74793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்ட மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்ட மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் 23054 குடும்பங்களைச் சேர்ந்த 73851 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 12118 குடும்பங்களைச் சேர்ந்த 39932 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6520 குடும்பங்களைச் சேர்ந்த 20737 பேரும், மன்னார் மாவட்டத்தில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேரும், வவுனியா மாவட்டத்தில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேரும், கண்டி மாவட்டத்தில் 199 குடும்பங்களைச் சேர்ந்த 890 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்த நிலைமையினால் இதுவரையில் யாழ். மாவட்டத்தில் ஒரு மரணம் அடைந்துள்ளார். 26 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 318 வீடுகளுக்கு சிறியளவிலாள சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட 3698 குடும்பங்களைச் சேர்ந்த 11310 பேர் 39 பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் மேலும் கூறியுள்ளது.
சுனாமி நினைவுதினம் நாடளாவிய ரீதியில் நேற்று அனுஷ்டிப்பு
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அந்நாளை நாடளாவிய ரீதியில் மக்கள் அனைவரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கவுள்ளனர்.
காலி, பெரலிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்னால் நேற்று காலை 9.00 மணிக்கு சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், பாதுகாப்புப் படையினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை சுனாமி நினைவுதினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் மத அனுஷ்டானங்களுக்கும், அனர்த்தம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்குமே அதிகம் முன்னுரிமை கொடுக்கப்படுமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அந்தவகையில் அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களிலும் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறும் அந்நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.