நத்தார் விழாவில் சம்பந்தன்
22 Dec,2018
நாட்டைக் கட்டியெழுப்புதற்காக புதிய அரசுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நத்தார் விழா நேற்றுமுன்தினம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்துகொண்டார். அது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதியின் அழைப்பின்பேரில் நானும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் நத்தார் விழாவில் கலந்துகொண்டோம். அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது.
இனியும் நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என்று அவர்களிடம் கோரினேன். இன, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும் என்றும் கோரினேன்.
கடந்த 50 நாட்களுக்கு மேலாக நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் சர்வதேச ரீதியில் நாட்டின் நற்பெயருக்குக் கேடு விளைவித்துள்ளன. நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்துத் தரப்பினரும் புதிய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரினேன்” – என்றார்.