யாழில் விடுதலைப்புலிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!
22 Dec,2018
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பானது மௌனத்துக்குள் இயங்கு நிலையில் உள்ளது எனவும் தமிழீழ பண்பாட்டு காலாச்சார விழுமியங்களுக்கமைய செயற்பட வேண்டுமென்றும் எச்சரிக்கை விடுத்தும் வடமராட்சி கிழக்குப் பகுதியில் நேற்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இதே போன்று சுவரொட்டிகள் வடமராட்சியின் வல்லை முனீஸ்வரன் கோவிலை அண்டிய பகுதிகளில் குறித்த் நேற்று முன்தினம் ஒட்டப்பட்டு இருந்தன. அது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த சுவரொட்டிகளை கிழித்து அகற்றியுள்ளதுடன் சுவரொட்டிகள் ஒட்பட்டமை தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று வடமராட்சி கிழக்கு பகுதிகளில் அதே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. அதிலும் நேற்று முன்தினம் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் சிவப்பு நிறத்தில் காணப்பட்ட நிலையில் நேற்று ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் வெள்ளை நிறத்திலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சுவரொட்டியில் தமிழீழ திருநாட்டை மீட்கும் எமது தியாக போராட்டம், 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களினதும், 2 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களினதும், பல ஆயிரம் போராளிகளால் பொறிக்கப்பட்ட உன்னத வரலாறு ஆகும்.
ஆயுத போராட்டமானது 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி மௌன நிலைக்கு வந்ததே தவிர அது மரணமடையவில்லை. மௌனத்துக்குள் அது தன் இயங்கு நிலையில் உள்ளதென்பதை அனைவரும் நன்குணர்ந்து கொள்ள வேண்டும்’ எனவும் எமது சமூகத்தை திசை திருப்பும் இனவழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் அதிலிருந்து விடுபட்டுக் கொள்ள வேண்டுமென்றம் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு அச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.