சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு! : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி
15 Dec,2018
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய தனிநபர்கள் வழி பிழையானது. எல்லாம் முடிந்துவிட்டது.
எதையேனுந் தாருங்கள் என்று கேட்பது போல் இருக்கின்றது அவ்வழி. பேசும் முறை மாற்றமடைய வேண்டும்.
சரிசமனாக நின்று பேச வேண்டும். நாம் கோருவது கிடைக்காத போது மாற்று வழி என்ன என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம் என வடக்கு முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் சிட்னியில் இருந்து இயங்கும் தாயகம் தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
பேட்டியின் முழு விபரம் வருமாறு:
கேள்வி: - இந்தியாவில் திராவிடர் கழகம் தொடங்கியதைப் போல – மக்களுக்கான ஓர் அமைப்பாக தமிழ் மக்கள் பேரவை ஆரம்பித்தது, அப்போது அரசியல் கட்சியாக மாறும் எண்ணம் பேரவைக்கு இல்லை என்றும் தெளிவாகச் சொல்லப்பட்டது.
ஆனால் அது இப்போது ஓர் அரசியல் அமைப்பாகப் பரிணாமம் கண்டிருக்கிறது. பேரவை மேடைகளில் அரசியலுக்கு இடமில்லை என்று சொன்ன நீங்களே இப்போது பேரவை மேடையில் வைத்து அரசியல் கட்சி ஒன்றை அங்குரார்ப்பணம் செய்த நோக்கம் என்ன? அந்தத் தீர்மானம் சரியானதா?
பதில்: - உங்கள் கருத்து தவறானது. தமிழ் மக்கள் பேரவை இன்றும் ஒரு சுதந்திரமான மக்கள் இயக்கம்.
தமிழ் மக்கள் கூட்டணி என்பது தமிழ் மக்கள் பேரவையின் ஒரு அலகோ அல்லது பரிமாணமோ அல்ல.
அநாத்மா என்ற பௌத்த கொள்கையை விளக்க வந்த புத்த பெருமான் ஒரு அழகான உதாரணத்தைக் கூறினார்.
ஒரு விளக்கில் இருக்கும் சுடரைக் கொண்டு இன்னொரு விளக்கை ஏற்றுகின்றோம். புதிய சுடர் வேறு பழைய சுடர் வேறு.
புதிய சுடர் தானாகத் தனித்து இயங்குவது. அதேபோல் தமிழ் மக்கள் கூட்டணி சுதந்திரமாகச் செயற்படும் ஒரு கட்சி.
பேரவையின் கொள்கைகளும் கூட்டணியின் கொள்கைகளும் கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பினும் பேரவை வேறு கூட்டணி வேறு.
தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியல் அமைப்பு அல்ல. அது தொடர்ந்து மக்கள் இயக்கமாகவே செயற்படும்.
அதில் பல அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. தமிழ் மக்கள் கூட்டணியும் அதில் இணைந்து கொள்ளும். கொள்கைகளில் ஒன்றியைந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட எங்களுடன் இணைந்து கொள்ளலாம்.
வடமாகாண சபையின் காலம் முடிவடைந்ததும் தமிழ் மக்கள் பேரவை ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதில் நான் உரை ஆற்றினேன்.
அதில் தமிழ் மக்கள் கூட்டணி என்ற ஒரு கட்சியை ஆரம்பிக்கப் போவதாக மக்களுக்கு அறிவித்தேன்.
இந்தக் கட்சிக்கு தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவையும் அனுசரணையையும் கொள்கை ரீதியில் ஒன்றுபட்டவர்கள் என்ற முறையில் கோரி இருந்தேன். அவ்வளவுதான்.
எந்த இடத்திலும் தமிழ் மக்கள் கூட்டணியை தமிழ் மக்கள் பேரவையின் ஒரு பரிமாணம் என்று நான் சொல்லவில்லை.
கேள்வி: – தமிழ் மக்கள் கூட்டணி என்பது இலங்கையின் சட்ட வரைவிலக்கணப்படி ஒரு கட்சியாக இருக்கலாம்.
ஆனால், இலங்கையில் கூட்டணி அல்லது கூட்டமைப்பு என்பது பல கட்சிகள் இணைந்த ஒரு கட்டமைப்பே. இவ்வகையில் உங்களது கட்சி ஒரு தனிக்கட்சியா அல்லது பல கட்சிகளை ஒரு குடைக்கீழ் இணைக்கும் ஓர் அமைப்பா?
பதில்: - தமிழ் மக்கள் கூட்டணி என்பது தனியான ஒரு கட்சி. தேர்தல் அரசியலிலும் சரி தேர்தலுக்கு அப்பாற்பட்ட அரசியலிலும் சரி, நாம் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் சமூக அமைப்புக்களுடனும் இணைந்தே எமது மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம்.
பல அமைப்புக்கள் ஒன்றிணைந்தே ஒரு கூட்டணியை உருவாக்க கோரினார்கள். அதைச் செய்துள்ளோம்.
எமது செயற்பாடுகளின் அடிப்படையில் நாம் எல்லோருடனும் ஒன்றுபட்டு ஒன்றிணைந்தே செயற்படுவோம்.
அந்தவகையில், பல கட்சிகள், சமூக அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து செயற்படும் அமைப்பாக எமது கட்சியை நீங்கள் பார்க்கலாம்.
கேள்வி: – அரசியல் கட்சி என்று வந்துவிட்டால் உங்களுக்கென அரசியல் அபிலாஷைகள் இருக்கும். அவற்றைச் சென்றடைய கொள்கை வெளியீடு , தேர்தல் விஞ்ஞாபனம் என்று வெளிப்படையான பிரகடனங்கள் வரவேண்டும்.
அவற்றில் பல மிகைப்படுத்தப்பட்ட வாசகங்கள் இருக்கும். இலங்கையில் என்றல்ல, ஜனநாயக நாடுகள் எதிலுமே வெல்லும் கட்சிகளாலேயே தமது தேர்தல் பிரகடனங்களை நிறைவேற்ற முடிவதில்லை.
அந்நிலையில் அமோக வெற்றி பெற்றாலுங் கூட தேசிய மட்டத்தில் ஒரு சிறுபுள்ளியாக மட்டுமே இருக்கப்போகின்ற உங்கள் அமைப்பினால் என்ன மாற்றங்களை செய்ய முடியும்?
பதில்: - நிச்சயமாக முடியும். ஒரு சில தனி நபர்களின் அடிப்படையில் அல்லாது அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அல்லாது, நிறுவன மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை ஒரு கட்சியாக மேற்கொள்ளும் போது நிச்சயமாக மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
நீண்ட கால அடிப்படையிலும் பல நன்மைகளை இது கொண்டுவரும். தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்து இது தான் என்று மத்திய அரசாங்கமும் வெளியுலகமும் உணர்ந்து கொண்டதும் அவர்கள் அதற்கேற்றவாறு தம்மை மாற்றிக் கொள்வார்கள். அதற்கான நடவடிக்கைகளை நாம் இப்போது முன்னெடுத்து வருகின்றோம்.
கேள்வி: – தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைப்பிரகடனம் எப்போது வெளிவர இருக்கிறது? இந்த அமைப்பின் மற்றைய முக்கிய தலைவர்கள் யார்?
பதில்: - எமது அமைப்பின் யாப்பு மற்றும் கொள்கை பிரகடனங்களை தயார் செய்யும் பணிகள் முடியும் தறுவாயில் இருக்கின்றன.
நேற்றுக் கூட இது பற்றி ஆராயப்பட்டது. விரைவில் அவற்றையும் எமது கட்சியின் ஏனைய உறுப்பினர்கள், சின்னம், கொடி ஆகியவற்றையும் மக்களுக்கு அறிவிப்போம். எம் மக்களிடம் இருந்து எனக்குக் கிடைக்கும் ஆதரவும் அனுசரணையும் போற்றப்பட வேண்டியவை. அவர்கள் மத்தியில் இருந்தே தலைவர்கள் முன் வருவார்கள்.
கேள்வி: தற்போது கூட்டமைப்பில் உள்ள எந்தவொரு கட்சியோ அல்லது ஈ.பி.டி.பி.யோ உங்களது கூட்டணியில் வந்து சேரவேண்டாம் என்று நீங்கள் சொல்லியிருப்பதாகச் செய்திகள் வந்திருந்தன.
ஆனால், சில உள்ளாட்சி சபைகளில் அதே கட்சிகளுடன் அல்லது உங்கள் தராசில் அதனிலும் மோசமானவை என்று கருதப்படும் கட்சிகளுடனும் கூட்டு வைத்துள்ள ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியை எப்படி உங்கள் கூட்டணியில் இணைக்கமுடியும் என்ற கேள்விக்கு உங்கள் பதில் என்ன?
பதில்: – தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் ஈ.பி.ஆர்.எல்.எப். எம்முடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.
எழுக தமிழ் நிகழ்வுகள், தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் போன்ற பல விடயங்களை நாம் ஒன்றாகவே மேற்கொண்டிருந்தோம்.
எங்கேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அவை மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கான பொறிமுறைகளை அமைத்து நாம் செயற்பட பழகிக்கொள்ள வேண்டும்.
கொள்கை அடிப்படையிலும் பரஸ்பர நம்பிக்கை அடிப்படையிலுமே நாம் ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்.
இவற்றில் எந்தக் கட்சியேனும் இணங்கப்பட்ட கொள்கைக்கு முரணாகவும் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராகவும் நடந்துகொண்டால் அவர்களுடனான உறவை தமிழ் மக்கள் கூட்டணி முறித்துக்கொள்ளும். ஈ.பி.டி.பி. போன்ற சில கட்சிகள் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராக நடந்து வருகின்றன என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.
அவர்களுக்குப் பணமே முக்கியம். கொள்கைகள் முக்கியமல்ல. ஆகவே அவர்களுக்குத் தூரப் பார்வை இல்லை என்றே கொள்ள வேண்டியுள்ளது.
கேள்வி: - சாம பேத தான தண்டம் என்று எல்லாத் தந்திரங்களையும் உத்திகளையும் தமிழர்கள் பாவித்து முடித்துவிட்டார்கள்.
இப்போது மக்கள் இயக்கம் என்ற நிலையிலிருந்து அரசியல் அமைப்பாக வந்தவுடன் “அரசாங்கத்துடன் தடைப்பட்டுப் போயுள்ள இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்கும் பொருட்டு உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்தின் ஊடாகவும் அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று சொல்லுகிறீர்கள்.
சர்வதேச சமூகம் எமக்கு எந்த அளவுக்குத் தோள் கொடுக்கும் என்று நம்புகிறீர்கள்? அவர்களை மட்டும் நம்பி இறங்கிவிட்டு, தமது பூகோள அரசியல் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்கள் பின்வாங்கினால், தொடர்ந்து செல்வதற்கு என்ன உபாயங்களைத் தமிழ் மக்கள் கூட்டணி வைத்திருக்கிறது?
பதில்: - நாம் எல்லாவற்றையும் முயற்சித்து விட்டோம். இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று கூறுவது தவறு.
நாம் இதுகாறும் எமது பிரச்சினைகளை சிங்கள மக்களுடன் மனம் விட்டுப் பேசவில்லை. எமக்கு எதுவும் கிடைக்காது என்ற மனோநிலையில் கிடைப்பதைச் சுருட்டிக் கொள்வோம் என்றவாறாகவே நாங்கள் இதுவரையில் பேசி வந்துள்ளோம்.
ஆனால் இந்த சலிப்பு, போராட்டத்தில் ஈடுபடும் எல்லா இனங்களுக்கும் ஏற்படக்கூடிய ஒன்றுதான்.
ஆனால், இந்த சலிப்பைக் கண்டு மனம் தளராமல் கடந்த காலங்களில் இருந்து பாடங்களைப் படித்துக்கொண்டு எமது வழிமுறைகளை நாம் வகுக்கவேண்டும். தமிழ் மக்கள் கூட்டணி அவ்வாறான சில வழிமுறைகளை வகுத்துச் செயற்படும்.
இவற்றை ஆழமாக இங்கு கூறமுடியாது. ஆனால் தமிழ் மக்கள் பேரவையில் ஆற்றிய உரையில் அவற்றைக் கோடிட்டு காட்டி இருக்கின்றேன்.
சர்வதேச சமூகத்தில் மட்டும் நாங்கள் நம்பியிருக்கின்றோம் என்று நீங்கள் நினைத்தால் அது சிறுபிள்ளைத்தனமான சிந்தனை என்பதே எனது பதில்.
கேள்வி: – 2009ஆம் ஆண்டின் பின் மக்களின் மனக்கருத்து மாறியிருக்கிறது. இவ்வளவு உச்சநிலைத் தியாகங்களுடனும் இழப்புகளுடனும் எடுத்த முயற்சியே வெல்லாது போய்விட்டது என்ற சலிப்புடன் அவர்கள் தம்மை நிலைப் படுத்திக்கொண்டு போக முற்படுகிறார்கள்.
இந்நிலையில் ஒரு வன்போக்கு நிலைப்பாட்டுக்கு ஆதரவு தர அவர்கள் தயாராக இல்லை என்ற கருத்து அவதானிகள் மத்தியில் இருக்கிறது.
இலங்கை என்ற ஒரே நாட்டுக்குள் தான் எமது பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் – தீர்க்கப்படும் என்பது தான் உங்களினதும் தமிழ் மக்கள் கூட்டணியினதும் எத்தனம் என்பதை உறுதிப்படுத்துவீர்களா?
பதில்: - விசித்திரமான கேள்வி. இலங்கை நாட்டில் இணைந்த வடக்கு கிழக்கில் சுய நிர்ணய அடிப்படையில் தீர்வு ஒன்றைக் காணுவதே தமிழ் மக்கள் கூட்டணியின் இலக்கு. அந்த இலக்கை வைத்தே எமது நகர்வுகள் நடைபெறுகின்றன.
கேள்வி: - தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையை விமர்சிக்கும் நீங்கள், தமிழ் மக்கள் பிரச்சினைக்கு எவ்வழியாகத் தீர்வைப் பெறலாம் என தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு விளக்குவீர்களா? உங்கள் விருப்புக்குரிய வழி சரிவராதுவிட்டால் மாற்றுவழித்திட்டம் யாது?
பதில்: – குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களுடன் நிறுவன மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளின் ஊடாக அரசியல் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றைச் சமாந்தரமாக நாம் முன்னெடுத்துச் செல்ல உத்தேசித்துள்ளோம்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய தனிநபர்கள் வழி பிழையானது. எல்லாம் முடிந்துவிட்டது. எதையேனும் தாருங்கள் என்று கேட்பது போல் இருக்கின்றது அவ்வழி.
பேசும் முறை மாற்றமடைய வேண்டும். சரிசமனாக நின்று பேச வேண்டும். நாம் கோருவது கிடைக்காத போது மாற்று வழி என்ன என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம். எமது சிந்தனைகளும் செயல்களும் இறையாசியுடன் நடைபெறுவன.
கேள்வி: - கனவான் அரசியல், புரிந்துணர்வு அரசியல், இணக்க அரசியல், சரணாகதி அரசியல் போன்ற பல வடிவங்களில் தேசிய மட்டத்தில் தமிழர் அரசியல் இருந்திருக்கிறது.
அரசியலில் உங்களுக்கு விரும்பிய விதத்தில் மக்கள் ஆதரவும் பிரதிநிதித்துவமும் உங்களுக்கு இருக்கிறது என்று ஒரு நிலைமை இருந்தால் உங்கள் அணுகுமுறை எப்படி இருக்கும்?
பதில்: - அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அரசியல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இயன்றளவுக்கு எல்லா மக்களையும் ஈடுபடுத்தி செயற்படமுயற்சிப்பேன்.
மக்களின் ஆலோசனைகளும் பங்குபற்றுதலுமே உண்மையான பலமாகும். ஓரிருவரின் கனவான் அரசியலும் சரணாகதி அரசியலும் பலமாகா.
(தொடரும்)