யாழில் சித்திரவதைகள் தொடர்பாக வெளியான தகவல்!
11 Dec,2018
2018 ஆண்டின் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து சித்திரவதைகள் தொடர்பில் 31 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையானது கடந்த காலங்களை விட அதிகமானது என இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் யாழ் பிராந்திய பணிப்பாளர் எஸ்.கனகராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.
டிசெம்பர் பத்தாம் திகதியான நேற்றைய தினம் உலகம் முழுவதும் அனுட்டிக்கப்பட்ட 70 ஆவது சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் டிசெம்பர் 11 ஆம் திகதியான இன்றைய தினம் விசேட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் பிராந்திய பணிப்பாளர் எஸ்.கனகராஜ் சித்திரவதை தொடர்பாக 31 முறைப்பாடுகளும், சட்டத்திற்கு புறம்பாக கைதிகளை தடுத்து வைத்தமை தொடர்பாக 13 முறைப்பாடுகளும் 2018 ஆம் ஆண்டில் மாத்திரம் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
சித்திரவதை தொடர்பான முறைப்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கு சட்ட வைத்திய அதிகாரிகளின் அறிக்கைகள் முக்கியம் என்றும் குறிப்பிடும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய பணிப்பாளர், கடந்த ஜூலை மாதத்திற்கு பின்னர் சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்த சட்ட வைத்திய அதிகாரிகள் அறிக்கைகள் கிடைக்கவில்லையெனவும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.