இன அழிப்பிற்கு அரசாங்கம் பொறுப்புக் கூறவில்லை என்றால், தமிழர்கள் மீண்டும் கொல்லப்படலாம்
11 Dec,2018
போர்க்குற்றம் மற்றும் இன அழிப்பிற்கு அரசாங்கம் பொறுப்புக் கூறவில்லை என்றால், தமிழர்கள் மீண்டும் கொல்லப்படலாம் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் அச்சம் வெளியிட்டுள்ளார்.
எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உட்பட விடுதலைப் புலி உறுப்பினர் சிலரின் ஆட்கொணர்வு வழக்கு நேற்று (திங்கட்கிழமை) வவுனியா நீதிமன்றில் நடைபெற்றது.
வழக்கு விசாரணைக்கு சென்ற அனந்தி சசிதரன், அங்கு செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“நேற்றைய தினம் எங்களது ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு வவுனியா நீதிமன்றத்தில் நடைபெற்றது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ம் திகதி வழக்கு விசாரணைக்காக எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சர்வதேச மனித உரிமை தினம். இந்த நாட்டில் தமிழர்களாகவே பிறந்தமைக்காவே கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு அடிமை வாழ்க்கைக்கு தள்ளப்பட்டிருக்கின்ற நிலையில் மன்னார் புதைகுழியில் மிகவும் வேதனையளிக்கக் கூடிய வகையில் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இரும்பு கம்பியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் தாயும் குழந்தையுமாக பல எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. எல்லாமே ஆடைகள் எதுவுமில்லாமல் மிகவும் அநாகரிகமாக புதைக்கப்பட்டவை.
இவற்றை ஓரு மனிதப் படுகொலையாக பார்க்கின்றோம். இன்று சகல நாடுகளும் மனித உரிமைகள் தினத்தை அனுஸ்டிக்கும் நாள். ஆனால் எங்களது மண்ணில் மட்டும் மனித உரிமை மீறல், அநியாயங்கள் எல்லாம் நடக்கின்ற போது எங்களுடைய தலைமைகள் கூட மனித உரிமைகள் தொடர்பாக இடித்துரைக்க முடியாதவர்களாக அல்லது பொறுப்பு கூற செய்ய முடியாதவர்களாக இருக்கின்ற நிலையில் வருத்தத்துடன் இன்றைய தினத்தை அனுஸ்டிக்கின்றோம்.
ஆனால், இராணுவத்தினரிடம் ஓப்படைக்கப்பட்டவர்கள் தொடர்பாக 10 வருடங்கள் ஆகியும் நாங்கள் எந்தத் தீர்வினையும் பெற்றுக்கொள்ளாத நிலையில், அரசு காணாமல் போனோர் அலுவலகம் என்ற ஓன்றை கொண்டு வந்துள்ளது.
அதில் எந்தளவிற்கு செயற்பாடுகள் நடக்கின்றதோ இல்லையோ ஆனால் அந்த குழுவின் தலைவராக பிரபல சட்டத்தரணி சாலிய பீரிஸ் அவர்கள் இருக்கின்றார்கள்.
அவருக்கு எல்லா மக்கள் மத்தியிலும் நல்ல பெயர் இருக்கிறது. அந்த பெயரை தக்க வைத்துக் கொள்வதற்காக அவர் நிச்சயமாக காத்திரமான தீர்வை எட்டித் தருவார் என நாங்கள் நம்புகின்றோம்.
அரசியலுக்கு அப்பால் அவர் மனிதவுரிமைகள் தொடர்பில் அக்கறையும், கரிசனையும் கொண்டவர். அதுமட்டுமல்ல சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் மதிப்புக்குரியவர்.
அந்த வகையில் காணாமல் போனவர்கள், சரணடைந்தவர்கள் தொடர்பாக எங்களுக்கு ஓரு நியாயம் கிடைக்கும் என நாங்கள் நம்புகின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.