" ஜெயலலிதா அப்போது கூறியது.!
05 Dec,2018
கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஜெயாவுக்கு ஆதரவாக தமிழகத்தின் மூலை, முடுக்குகளிலெல்லாம் முழங்கினர் ஈழ ஆதரவு அமைப்புகளை சேர்ந்தவர்களாக சீமான் உள்ளிட்டோர்.
அப்போது அவர்கள் இனப்படுகொலைக்கு இந்திய அரசும், அதில் பங்கு வகித்த கருணாநிதியும் தான் என குற்றம் சாட்டினர். இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என உச்சஸ்தாயில் பிரச்சாரம் செய்தார் சீமான்.
உண்மையில் ஈழத்திற்கு ஆதரவானவர் தானா ஜெயலலிதா என்றால், தனி ஈழம் என்பதனை அவர் ஆதரித்தவரில்லை. தனி ஈழக்கோரிக்கையை முன்னிறுத்திய விடுதலைப் புலிகளை போராட்ட குழு என்றெல்லாம் அவர் கருதவில்லை. ஜெயாவின் பார்வையில் விடுதலைப் புலிகள் என்றைக்கும் பயங்கரவாதிகள் தான்.
பாரத பிரதமராக பதவி வகித்த ராஜீவ் கொல்லப்பட்ட பின்னர், 1991 செப்டம்பரில் "என்னைக் கொல்ல புலிகள் இயக்கத்தின் தற்கொலைப்படை தமிழகத்துக்குள் ரகசியமாக ஊடுறுவி உள்ளனர். ராஜீவ் கொலை தொடர்பான விசாரணை நடத்தி வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு அலுவலகத்தை தகர்க்கவும் ராஜீவ் கொலையில் கைதாகியுள்ள முக்கியப் புள்ளிகளை மீட்கவும் அவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்" சட்டப்பேரவையிலேயே பகிரங்கமாக குற்றம் சாட்டியவர்.
மத்திய அரசை, விடுதலைப் புலிகள் அமைப்பினை தடை விதித்தே ஆக வேண்டுமென நிர்பந்தித்தவர். தடை விதிக்க பட்ட பின்னரும், புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடித்து இங்கு கொண்டுவர வேண்டுமென தீர்மானம் இயற்றியவர்.
2002ல் புலிகளின் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம், சென்னையில் சிகிச்சை பெற முனைந்த போது, அதை காட்டமாக எதிர்த்து தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதா. ஈழ ஆதரவு தளத்தில் இயங்கிய ராமதாஸ், திருமா, வைகோ, தியாகு, கொளத்தூர் மணி, வைகோவின் தம்பி ராமச்சந்திரன் உள்ளிட்டோரை பல அடக்குமுறை சட்டங்களை ஏவி ஒடுக்க முயன்றவர்.
ஆக, இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு தடை விதிக்கப்பட ஜெயாவும் ஓர் முக்கியமான காரணம். பின்னாட்களில் 2011 தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஈழத்தமிழர்களுக்காக தனி தீர்மானம் இயற்றினார். ஆனால், இறுதி வரை புலிகளை பற்றிய அவரது பார்வை மட்டும் மாறவே இல்லை.