முன்னாள் போராளிகளை வேட்டையாடும் நடவடிக்கைகள்!!இது அப்பட்டமான அரசியல் சூழ்ச்சியென்றே
05 Dec,2018
வவுணதீவில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்துடன் முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்தி அவர்களை வேட்டையாடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினர்.
பாராளுமன்றத்தில் இன்று நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பான கொண்டுவரப்பட்ட சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சால்ஸ் நிர்மலநாதன், சிறிநேசன் , யோகேஸ்வரன் மற்றும் கோடீஸ்வரன் எம்.பிக்கள் இவ்வாறு வலியுறுத்தினர்.
இவர்கள் மேலும் பேசுகையில்,
பெரும்பான்மை பலம் கொண்டவராகவுள்ள ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக்க வேண்டுமெனவும் அதற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய மறுநாளே வவுனதீவில் இரு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இது அப்பட்டமான அரசியல் சூழ்ச்சியென்றே நாம் கருதுகின்றோம்.
சட்டத்திற்கு முரணான வகையில் ஆட்சியை கைபற்றியவேர்களே இதன் பின்னணியில் இருக்கின்றார்கள் என்பதே எமது சந்தேகமாகும். மீண்டும் வெள்ளை வான் கலாசாரத்தையும் இரவு நேர கைதுகளையும் மேற்கொள்வதற்கான ஒரு சூழ்ச்சியாக இது உள்ளது. எனவே இது தொடர்பில் புலனாய்வு துறையினர் உடனடி விசாரணைகளை ஆரம்பித்து உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்.