முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத் துறை உறுப்பினர் ஒருவர் கைது ! 20 பேரிடம் வாக்குமூலம்
04 Dec,2018
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் காவலரணில் கடமையிலிருந்த இரு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத் துறை உறுப்பினர் ஒருவர், இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளாரென, பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னன்குடா, கரையாக்கந்தீவிலுள்ள அவரது வீட்டில் வைத்தே, குறித்த புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடிகான் ஒன்றிலிருந்து புலனாய்வுப் பிரிவினரால் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளாரெனத் தெரியவருகிறது.
முன்னாள் போராளிகள் உட்பட 20 பேரிடம் வாக்குமூலம்!
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸார் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை முன்னாள் போராளிகள் உட்பட 20 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
மேலும், இவர்களில் இருவர் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதுடன் பல கோணங்களில் புலனாய்வு பிரிவு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வவுணதீவு, வலையிறவு பாலம் அருகில் பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடந்த வியாழக்கிழமை (29) நள்ளிரவு கடமையில் இருந்த பொலிஸார் இருவர் இனந் தெரியாதோரால் துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்காகியும் கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், சம்பவத்தை அடுத்து பொலிஸ் மா அதிபர் குறித்த இடத்திற்கு சென்றதுடன், 7 பேர் கொண்ட விசேட புலனாய்வு பிரிவு குழுவை கொழும்பில் நியமித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் தலைவர் க. பிரபாகரன் அதன் உறுப்பினர் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள், கட்சி உறுப்பினர் உட்பட முன்னாள் போராளிகள் மற்றும் பெண்கள் உட்பட 20 பேரை மட்டக்களப்பு பிராந்திய குற்றப் புலனாய்வு பிரவு காரியாலயத்துக்கு அழைத்து சென்று வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்ட இராசநாயகம் சர்வானந்தம் அங்கிருந்து மட்டக்களப்பிற்கு கொண்டுவரப்பட்டதுடன் அவருடன் மட்டு. தாண்டியடி பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் உட்பட இருவரையும் தடுத்து வைத்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.