விடுதலைப்புலிகளின் இரண்டாவது மிகப்பெரும் தலைவர் உயிருடன்!
01 Dec,2018
விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேற்றைய தினம் மட்டக்களப்பில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காரணமாகயிருக்கலாம் எனவும் கருணா தெரிவித்துள்ளார்.
ரிவிர என்ற சிங்கள வார இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் புலனாய்வு பிரிவை செயலிழக்கச் செய்துள்ளதுடன் தேசிய பாதுகாப்பை புறக்கணித்து பாதுகாப்பு படையினரிற்கு அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளது எனவும் கருணா தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடானது, விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு மீண்டும் புத்துயுர் ஊட்டும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொட்டு அம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை நோர்வேயில் மறைந்து வாழ்கின்றார் என கருணா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்கினாலும் ஆச்சரியமில்லை என குறிப்பிட்டுள்ள கருணா இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு நானும் உதவியுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையை உலுக்கிய இரட்டைக்கொலை; விடுதலைப்புலி உறுப்பினர் சரண்!
மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முன்னாள் போராளி ஒருவர் இன்று காலை சரணடைந்துள்ளார்.
மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்வதற்கு பொலிசார் இடையூறு விழைவித்தமைக்கு பழிவாங்குவதற்காக இடம்பெற்றிருக்கலாம் என கருதி விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
அத்துடன் சரணடைந்தவர் முன்னாள் போராளியான வட்டக்கச்சிப் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான இராசநாயகம் சர்வானந்தன் (வயது 48) என்பவர் என கிளிநொச்சிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்
இவரது வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டதன் பின்னர் சிஐடியிடம் பொலிசார் பாரப்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.