மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் உறவுகளை வீட்டுக்கு சென்று தாக்கும் இலங்கை அரசு!
29 Nov,2018
தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்தியமைக்காக வடமராட்சியில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக கூறியிருக்கும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் அச்சத்துடன் வாழ்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாவீரர் நாள் நினைவேந்தல் நடாத்தியமைக்காக நேற்று (28) இரவு வடமராட்சியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணையக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் சந்திப்பை மேற்கொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், பருத்துறை சுப்பர்மடம் பகுதியில் கடந்த 27-ம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு ஊர் மக்களால் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் 26-ம் திகதி மாலை வாள்கள், துப்பாக்கிகள் சகிதம் சிலர் அங்கு வந்து தம்மை இரகசிய பொலிஸார் என அடையாளப்படுத்திக் கொண்டு மக்களை கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர். மேலும் 4-ம் மாடிக்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்படுவீர்கள் எனவும், தாக்குதல் நடாத்துவோம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனாலும் 27-ம் திகதி மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலிகளை செலுத்த முயன்றபோது அங்கே பொலிஸாரும், பொலிஸ் சீருடை அல்லாத சிவில் உடையில் வந்த சிலரும் மீண்டும் மக்களை மோசமாக அச்சுறுத்தியுள்ளதுடன்,
ஆயுதங்களை காண்பித்து மாவீரர்களுக்கான நினைவேந்தல் நடாத்தப்படும் இடத்திற்கு செல்ல க்கூடாது எனவும் விரட்டியுள்ளனர். இதனால் பின்னர் ஊருக்குள் உள்ள பொது மண்டபம் ஒன்றில் மக்கள் நினைவேந்தலை நடாத்தியுள்ளார்கள்.
இதன் பின்னர் 28-ம் திகதி அதிகாலை ஊரில் மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னின்று ஒழுங்க மைத்தவருடைய வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிங்களத்தில் சரமாரியாக பேசிக் கொண்டு வீட்டின் கதவை உதைந்து திறப்பதற்கு முயற்சித்துள்ளார்கள்.
எனினும் அது சாத்தியப்படாத நிலையில் கதவு, ஜன்னல்களை உடைத்து நொருக்கியுள்ளனர். பின்னர் அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்திருந்தார்கள்.
ஆனால் தாக்குதல் நடாத்தியவர்கள் அதற்குள் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். இந்த சம்பவம் இடம்பெற்றபோது அந்த வீட்டில் வயதான பெண் ஒருவரும், அவருடைய பேரக்குழந்தையும் அறை ஒன்றுக்குள் ஒழிந்திருந்துள்ளார்கள்.
இவ்வாறு பல்வேறு அச்சுறுத்தல்கள் அந்தப்பகுதி மக்களுக்கு தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் நான் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கே மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றார்கள்.
அவர்களுடன் பேசியபோது தங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் 31 பேர் மாவீரர்களாகியுள்ளார்கள். அவர்களுக்கான நினைவேந்தலை நடாத்தியது தொடர்பாக கூறினார்கள். மேலும் தாக்குதல் தொடர்பில் பொலிஸ் நிலையதில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறித்தும் கூறினார்கள். நான் கூறினேன் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு கொடுக்கலாம் என அதற்கு தாங்கள் வருவதாக அவர்கள் கூறியிருந்தார்கள். ஆனால் அவர்கள் அச்சம் காரணமாக வராத நிலையில் நான் இன்று காலை 11.30 மணியளவில்
மனித உரிமைகள் ஆணையக்குழுவின் பொறுப்பதிகாரி கனகராஜ்யை தொடர்பு கொண்டு விடயங்களை தெளிவுபடுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுங்கள் என கோரிக்கை விடுத்திருக்கின்றேன்.
இதேபோல் கடந்த மாதம் கடலட்டை பிடிக்கவந்த தென்னிலங்கையை சேர்ந்தவர்களை பிடித்து வந்த எமது மீனவர்கள் மீதும் இன்றளவும் விசாரணைகள் அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
எனவே வடமராட்சியில் அரச பயங்கரவாதம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கின்றது. மக்கள் நினைவுகூருவதற்கு உரித்துடையவர்கள் என நீதிமன்ற தீர்ப்புக்களே வந்திருக்கின்றன, அரசியல் தலைவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
இந்நிலையிலும் வடமராட்சியில் இவ்வாறு அடாவடிகள் தொடர்ந்து கொண்டிருப்பதை நாங்கள் பார்க்ககூடியதாக இருக்கின்றது. இந்நிலை தொடருமாக இருந்தால் அரச பயங்கரவாதத்தை நாங்கள் அம்பலப்படுத்துவதற்காக வீதிகளில் இறங்கி போராடவேண்டிய நிலை நிச்சயமாக உருவாகும் என அவர் மேலும் கூறினார்.