மாவீரர் தினத்துக்கு இலங்கை அரசு மறுப்பு- "போராளிகளை நினைவு கூர்வது மக்களின் உரிமை"
27 Nov,2018
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உயிர் நீத்த விடுதலை வீரர்களை நினைவுகூரும் மக்களின் உணர்வினை எந்த எதிர்ப்பினாலும் தகர்த்து விட முடியாது என வடக்கின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
"இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தமது விடுதலை வீரர்களை நினைவுகூரும் உரிமைக்கு எதிராகத் தெற்கில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் துர்பாக்கிய நிலைமை காணப்படுகிறது." என்றும் அவர் தெரிவித்தார்.
"போரில் உயிர்நீத்த தமது பிள்ளைகளை தாய் தந்தையர் நினைவுகூர்ந்து அழுவதையோ, தமது உடன்பிறப்புக்களை சகோதரர்கள் நினைவுகூர்ந்து தேற்றிக் கொள்வதையோகூட சகித்துக்கொள்ள முடியாத தெற்கின் இழி மனோநிலையை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளவேண்டும்" என விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
மாவீரர் தினத்தை இலங்கை அரசு தடுக்க நினைப்பதை பற்றி இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
"தமிழ் மக்களின் இதயத்தில் இருக்கும் தலைவர் பிரபாகரனை அடக்கவோ அல்லது இல்லாமல் செய்யவோ எந்த ஆட்சியாளர்களாலும் முடியாது என்பதை அடக்குமுறையாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்" என தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் நெருங்கிய உறவினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
"மாவீரர்களை நினைவேந்தாமல் அடக்குமுறைகளுக்கு அடிபணிவதாக இருந்தால் நிச்சயமாக எங்களுக்கு விடுதலையைப் பற்றிச் சிந்திப்பதற்கோ அல்லது அதனை அனுபவிப்பதற்கோ எந்த விதமான அருகதையில்லை என்பதையும் எங்கள் மக்கள் உணர வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
மாவீரர் தினத்தை கொண்டாடக்கூடாது என இலங்கை அரசு அறிவித்திருப்பது உலக நாகரிகத்திற்கு முரணானதும் அடிப்படை மனித உரிமையை மீறும் செயல் எனவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
"இன விடுதலைக்காகப் போராடி உயரிய தியாகமான உயிர்த்தியாகத்தை செய்த போராளிகளையும் மக்களையும் நினைவுகூர்வதும் உலக வழக்கம் மட்டுமல்ல அந்தந்த மக்களின் உரிமையும்" என தெரிவித்தார் சுரேஷ் பிரேமசந்திரன்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாகப் பிரகடனம் செய்து அதனை மார்தட்டி விழா எடுக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியல் சமூகம் விடுதலைப் புலிகள் மீதான தடையை இன்னமும் நீக்காமல் இருப்பது புலிகளின் பெயரை வைத்து தென்னிலங்கையில் அரசியல் பிழைப்பு நடத்துவதற்கான குறுகிய அரசியல் நோக்கம் கொண்டதேயன்றி வேறில்லை என ஆவர் மேலும் தெரிவித்தார்.
மாவீரர் தினம்
தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்களது உயிரை தியாகம் செய்த மாவீரகளை நினைவு கூறும் நாள் இன்று செவ்வாய்க்கிழமை தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாலை 6.05 மணிக்கு அக வணக்கதுடன் மாவீரர்தின அஞ்சலி நிகழ்வு ஆரம்பமாகும்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தும் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாவீரர்கள் உயிரிழந்துள்ளனர்.