இலங்கையில் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டம் - சிவாஜிலிங்கம் கைது
26 Nov,2018
இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டு போரில் 2009-ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பிரபாகரனின் 64-வது பிறந்தநாளான நவம்பர் 26-ம் தேதியை இன்று உலகம் முழுவதும் வாழும் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களும், இலங்கையில் வாழும் தமிழின மக்களும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இலங்கையில் தமிழர்கள் பெருவாரியாக வாழும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த கொண்டாட்டம் களைகட்டியது.
பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடக்கூடாது, விழாவில் யாரும் கலந்துகொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு எச்சரித்திருந்தும் அங்கு பல பகுதிகளில் இன்று பிறந்தநாள் விழாக்கள் நடத்தப்பட்டது .
இந்நிலையில், வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த இடமான வெல்வெட்டித்துறையில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
அங்கு வைத்திருந்த பிறந்தநாள் கேக் மற்றும் பிரபாகரனை புகழும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பேனர்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பிரபாகரன் பிறந்தநாளை நினைவு கூரும் வகையில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அவரைப்பற்றிய பதிவுகள் அதிகமாக காணப்பட்டன