யாழில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாளை கொண்டாடிய மாணவர்கள்!
25 Nov,2018
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
தலைவர் பிரபாகரனின் 64-ஆவது பிறந்த நாள் இன்றாகும். இப்பிறந்தநாள் நிகழ்வை தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பலரும் மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இந் நிலையிலேயே நள்ளிரவு வேளையில் பிறந்த நாள் கேக் வெட்டி பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் கொண்டாடியுள்ளனர்.
இதே வேளை பிரபாகரனின் இன்றைய (26) பிறந்த நாளை முன்னிட்டு பிரபாரனின் சிந்தனை எனக் குறிப்பிட்டு அவரின் பல சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் பல்கலைக்கழகத்திற்குள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
மேலும் நாளை மாவீரர் தின நிகழ்வுகள் அனுஷ்டிப்பதற்கு பல இடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற நிலையிலையே தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வு கொண்டாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாட முனைந்தவர்களிடம் விசாரணை
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த இடமான வல்வெட்டித்துறையிலுள்ள இல்லத்தில் அவருடைய பிறந்த நாள் நிகழ்வைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்தவர்களை பொலிஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றமையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்றாகும். இப்பிறந்த நாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்திலும் பிறந்த நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதற்காக பிரபாகரனின் காணி மற்றும் வீடு துப்பரவுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அங்கு துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் அடையாள அட்டைகளைப் பொலிஸார் பறிமுதல் செய்ததுடன் அவர்களையும் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பொலிஸாரும் புலனாய்வாளர்களும் பாதுகாப்பு பணிகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை தோன்றியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் வீட்டு காணியினை துப்பரவு செய்த இளைஞர்கள் கைது –
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு, வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீட்டு காணியினை துப்பரவு செய்த நாலு இளைஞர்களின் அடையாள அட்டைகளை வல்வெட்டிதுறை காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன் , நால்வரையும் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.
அதேவேளை பிரபாகரனின் வீடு அமைந்திருந்த பகுதியில் பெருமளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். குறித்த வீடு இராணுவத்தினரால் முற்றாக இடித்தழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழீழத் தேசிய தலைவரின் பிறந்தநாள் கரைச்சி பிரதேச சபையினால் முன்னெடுக்கும் நிகழ்வு
தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாள் நாளைய தினம் உலகம் பூராகவும் வசிக்கும் தமிழ் மக்கள் நாளைய தினம் கொண்டாட உள்ள நிலையில் கரைச்சி பிரதேச சபையினால் நாளைய தினம் 4 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட பசுமை பூங்கா திறக்கப்படவுள்ளது. கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகாமையில் திறக்கப்படவுள்ள இந்தக் கட்டிடத்திற்கு முன்பாக இந்த பசுமை பூங்காவிற்கு முன்பாக உள்ள சந்திரன் பூங்காவில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பு சின்னம் இருப்பதன் காரணமாக அதை பயன்படுத்த முடியாமல் உள்ளது இருந்த போதிலும் அந்த பசுமை பூங்காவை புனிதமான நாளில் ஆரம்பிப்பதாக கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார் தமிழர்களுக்கு முகவரி தந்த தமிழர்களுக்கு அடையாளம் தந தமிழர்களின் தனிப்பெரும் தலைவனது பிறந்தநாளில் மக்களின் பாவனைக்காக அந்த பூங்காவை கையளிப்பது எமக்கு பெரும் மகிழ்வைத் தருவதாக பொதுமக்களும் தெரிவித்தனர். அவரது பிறந்த நாளில் மிக கையளிப்பது என்பது வரலாற்றுப் பதிவு எனவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டினார்கள்