இலங்கையில் ராஜபக்சே மீது 122 எம்.பி.க்கள் வழக்கு
24 Nov,2018
இலங்கையில் பிரதமர் பதவி வகித்த ரனில் விக்ரம சிங்கேவை கடந்த மாதம் 26-ந்தேதி அதிபர் சிறிசேனா நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சே நியமிக்கப்பட்டார். எனினும் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு ராஜபக்சேவுக்கு கிடைக்கவில்லை.
எனவே பாராளுமன்றத்தை கலைத்து விட்டு ஜனவரி 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடத்த அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். அதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. அதைத் தொடர்ந்து அதிபரின் உத்தரவுக்கு கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
அதன்பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் 2 முறை ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாதீர்மானம் கொண்டு வந்தன. அவை இரண்டிலும் ராஜபக்சேவுக்கு தோல்வியே கிடைத்தது.
இதற்கிடையே நேற்று இலங்கை பாராளுமன்றத்தில் சபாநாயகர் 12 பேர் கொண்ட தேர்வு குழு பட்டியலை வெளியிட்டார். அதில் சர்ச்சை வெடித்தது. அதைத் தொடர்ந்து தேர்வுக்குழு நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.
அதில் சபாநாயகரின் முடிவுக்கு ஆதரவாக 121 ஓட்டுகள் கிடைத்தது. ராஜபக்சேவுக்கு ஆதரவாக ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.
அதன்மூலம் பாராளுமன்றத்தில் 3-வது முறையாக நடத்தப்பட்ட ஓட்டெடுப்பிலும் ராஜபக்சேவுக்கு கடும் தோல்வி ஏற்பட்டது.
இந்த நிலையில் 122 எம்.பி.க்கள் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மீது கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.
அதில், “பிரதமர் ராஜ பக்சேவும், அவரது மந்திரிகளும் சர்ச்சைக்குரிய முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைந்த நிலையில் ராஜபக்சே பிரதமர் அலுவலகத்தை அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அவரது நியமனம் செல்லாது என அறிவிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.