128 பேர் கையொப்பமிட்டுள்ளனர்; மஹிந்த பதவி விலக வேண்டும்’-
16 Nov,2018
மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து பதவி வகித்த முடியாது எனவே அவர் பிரதமர் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற சபை அமர்வின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபித்திருக்க வேண்டும். அது ஜனநாயக கடமை. அந்த கடமையை நிறைவேற்ற அவர் தவறினார்.
நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை நிறைவேற்றியாவது அவர் பெரும்பான்மையை நிருபித்திருக்கலாம் அதனையும் அவர் செய்யவில்லை.
பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதுடன், அமைச்சரவை புதிதாக பலர் நியமிக்கப்பட்டனர். சிலர் எம்.பிக்கள் விலை போனார்கள். இவ்வாறு பல முயற்சிகளை மேற்கொண்டும் மைந்தவால் 113 உறுப்பினர்களை சேர்க்க முடியாமல் போனது.
இவ்வாறான செயற்பாடுளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, பிரதமர் மற்றும் அவர் தாலைமையிலான அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, குரல் வாக்கெடுப்பின் மூலமாக (ஆம்/இல்லை) தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து 128 பேர் கையொப்பமிட்டு கடிதமொன்றை சபாநாயகரிடம் கையளித்தனர்.
மஹிந்த ராஜபக்ஷ நேற்று சபையில் ஆற்றிய உரைக்கு எதிராகவும், அவருக்கு எதிராகவும் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று நாடாளுமன்றம் கூடிய போது,சபாநாயகரை சபைக்கு வரவிடாது அவரது கதிரை மற்றும் அதனைச் சுற்றி மஹிந்த அணியினர் கூடி குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். அப்போது தாமதமாக பாதுகாப்புடன் வந்து தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்பட்டது.
மஹிந்த மீதும், அவர் தலைமையிலான அரசாங்கம் மீதும், நம்பிக்கையில்லாப் பிரேரணை மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தீர்மானத்துக்கமைய மஹிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே அவர் இராஜிநாமா செய்ய வேண்டும். பதவி வகிக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை.
அத்துடன், அமைச்சுகளில் அமைச்சர்களாக பதவி வகிப்பவர்களும் தங்களது பதவிகளை இராஜிநாமா செய்ய வேண்டும். அவர்கள் அவ்வாறு பதவி வகிப்பது தவறு.
தொடர்ந்தும் பதவி வகித்தால் அவர்கள் ஜனநாயக விரோதிகளாக கருதப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத ஒருவர் பிரதமராகவோ அரசாங்கத்தை ஆளவோ முடியாது. இது சட்டத்துக்கும்,ஜனநாயகத்துக்கும் விரோதமான செயற்பாடாகும் என்றார்.
———————————————————————————————————————————
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பேச்சுவார்த்தை நடத்தி, அரசாங்கத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானிக்க வேண்டுமென, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இன்று நடந்த சம்பவம், மிகவும் வேதனைக்குரியதாகும். 113 பெரும்பான்மை இல்லையாயின், இருப்பவர்களுக்குக் கொடுத்துவிட்டுச் செல்லவேண்டும். வெளிநாட்டுத் தூதுவர்கள் அனைவரும் வந்திருந்தனர். 113 பெரும்பான்மை இல்லாவிட்டால், எதற்காக பலவந்தமாக இருக்கவேண்டும்” – குமார் வெல்கம
“பிரதமராக, மஹிந்த ராஜபக்ஷவே பதவி வகிப்பார். அவரே, புதிய அரசாங்கத்துக்குத் தலைமை தாங்குவார்” – தினேஸ் குணவர்தன
“மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருக்கு எதிராக நான் முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது” – சுமந்திரன் எம்.பி
“எனது 25 வருட அரசியல் வாழ்வில், இன்றைய தினத்தை ஒரு கரிநாளாகப் பார்க்கிறேன். இப்போது அரசாங்கம் என்ற ஒன்று இல்லை. நம்பிக்கையில்லா பிரேரணையில் அவர்கள் தோற்றுவிட்டார்கள்” – ரவூப் ஹக்கீம் எம்.பி
“நாடாளுமன்ற உறுப்பினர்களைப் படுகொலை செய்யும் முயற்சியொன்று காணப்படுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இப்போது, அவ்வாறான முயற்சியை யார் செய்தார்களென்பது புலனாகிறது. இந்த நாட்டின் ஜனநாயகம், நாளுக்கு நாள் சீரழிந்து வருகின்றது” – அநுரகுமார திசாநாயக்க
“மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, இரண்டாவது முறையாகவும் நிறைவேற்றப்பட்டது.” – பாட்டலி சம்பிக்க ரணவக்க
சபாநாயகர், மற்றும் செங்கோலின் பாதுகாப்புக்காக, சபைக்குள் பிரவேசித்த பொலிஸார் மீதும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும், மிளகாய்த்தூள் கலந்த நீர் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால், நாடாளுமன்ற உறுப்பினர்களாக விஜித்த ஹேரத், காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது