நாடாளுமன்றத்தில் இன்று மேலும் குழப்பங்கள் வெடிக்கும் சாத்தியம்?
15 Nov,2018
நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என்பது நிருபணமாகியுள்ள நிலையில்,நாடாளுமன்றத்தில் இன்று தாம் ஆளும் கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொள்ளப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளதுடன், மகிந்த ராஜபக்சவை பிரதமராக சிறப்பு உரையாற்ற அனுமதிக்கப் போவதில்லை என்றும் எச்சரித்துள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் இன்று மீண்டும் குழப்பங்கள் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது.
”புதிதாக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை பெரும்பான்மை உறுப்பினர்கள் நிராகரித்துள்ள நிலையில், நாங்கள் அரசாங்கத் தரப்பு ஆசனங்களில் அமர்ந்து கொள்வோம்.
எமக்கு அரசாங்க தரப்பு ஆசனங்களை சபாநாயகரும், நாடாளுமன்ற பணியாளர்களும் ஒழுங்கு செய்து தருவார்கள் என்று நம்புகிறோம்” என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க நேற்று தெரிவித்திருந்தார்.
அதேவேளை, பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்ற முடியாது என்று ஐதேகவின் மற்றொரு தலைவரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
”நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத மஹிந்த ராஜபக்சவும், அவரது தரப்பினரும், இன்று ஆளும்கட்சி வரிசையில் அமரமுடியாது.
அரசியலமைப்பின் 48-2 பிரிவுக்கு அமைய, நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டமையால் பிரதமர் பதவியிழந்து விட்டார். இந்த பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் என்ற வகையில் உரையாற்றுவது சட்டவிரோதம்.
அவ்வாறு அவர் உரையாற்ற முனைந்தால் நாடாளுமன்றத்துக்குள் எதிர்ப்பு வெடிக்கக் கூடும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதனால் நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் பெரும் குழப்பங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, ஆசனங்கள் தொடர்பான முடிவை சபாநாயகரே எடுப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! – மைத்திரி சமூகமளிப்பாரா?
அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில், நாடாளுமன்றம் இன்று (வியாழக்கிழமை) காலை மீண்டும் கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.
இன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
சம்பிரதாயப்படி நேற்று ஜனாதிபதி நாடாளுமன்றிற்கு வருகைதருவாரென எதிர்பார்க்கப்பட்ட போதும், அவரது வருகை இடம்பெறவில்லை. எனினும், ஜனாதிபதியின் உரை நேற்று நாடாளுமன்ற அமர்வில் வாசிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஜனாதிபதி நாடாளுமன்றிற்கு வருகைதருவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு, பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று நாடாளுமன்றில் அறிவித்தார். அதனால், இன்று ஐக்கிய தேசிய முன்னணியினர் ஆளும் தரப்பு ஆசனங்களில் அமரப்போவதாக அறிவித்துள்ளனர்.
எனினும், மஹிந்த ராஜபக்ஷவே பிரதமர் பதவியில் தொடர்வார் என்றும், தற்போதைய அரசாங்கமே தொடரும் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ளது.
பிரதமருக்கு பெரும்பான்மையை காண்பிப்பதற்கான தேவை கிடையாது: ஜனாதிபதி
பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை உண்டா இல்லையா என்பதை காட்டும் தேவை நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் நம்பிக்கைக்குரிய ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் உள்ளபோதும், நாடாளுமன்ற சம்பிரதாயங்ளுக்கு அமைய அது அவசியமற்றதென ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டு, உறுப்பினர்களின் கையொப்பங்கள் அடங்கிய கடிதத்தை ஜனாதிபதிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அனுப்பிவைத்தார். அதற்கு அனுப்பிவைத்த பதில் கடிதத்திலேயே ஜனாதிபதி இவ்விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், சபாநாயகரின் செயற்பாடு அதற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக நாடாளுமன்ற நிலையியல் கட்டளை மற்றும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மீறி சபாநாயகர் செயற்பட்டுள்ளார் என்றும், நாடாளுமன்றில் உறுதிப்படுத்தப்படாத ஆவணமொன்றை தனக்கு அனுப்பிவைத்துள்ளமை குறித்து கவலையடைவதாகவும் ஜனாதிபதி மைத்திரி தனது பதில் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.