ஜனாதிபதி எடுத்துள்ள அத்தனை நடவடிக்கைகளும் சட்டத்துக்கு முரணானது ;
13 Nov,2018
ஜனாதிபதி எடுத்துள்ள அத்தனை நடவடிக்கைகளும் சட்டத்துக்கு முரணானது. அவர் அதற்குப் பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டினாலும் அவை சட்டப்படி பிழையாவை” என்று முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாராளுமன்றத் தேர்தல் தனது கூட்டணி போட்டியிடுவது தொடர்பில் தான் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
நடக்கிறது எல்லாமே சட்டவிரோதம். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அது முறியடிக்கப்பட்டு அவருக்கு ஆதரவு உள்ளது. என்று சொல்லப்பட்ட பின்னர், அவரைப் பிரதமர் பதவியிருந்து நீக்குவது சட்டப்படி பிழையானது. அதற்கு காரணமாக அரசியலமைப்பின் 70ஆவது பிரிவைக் காட்டி இருப்பதும் முரண்பாடானது – பிழையானது.
அந்த ஏற்பாடுகளும் ஜனாதிபதிக்குச் சார்பானதாக இல்லை. அவை அவருக்கு எதிரானதாகவே உள்ளன. இப்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும் சட்டத்துக்கு முரணானதாகவே இருக்கின்றன.
அதனால்தான் உயர் நீதிமன்றின் தீர்மானத்தைப் பொறுத்து தான் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பேன் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் அவ்வாறு செய்வாரோ தெரியாது. ஏனென்றால், அவருக்கு நெருக்குதல்கள் ஏற்படுத்தக் கூடும்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நெருக்குதல்களுக்கு அடிபணியாமல் சட்டத்துக்கு நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகின்றேன் – என்றார்.