7 தமிழர்கள் விடுதலை.. ஜனாதிபதிக்கு அனுப்பப்படாத தீர்மானம்
11 Nov,2018
.. ஆர்டிஐ மூலம் பகீர் தகவல்
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக தமிழக அரசால் அனுப்பப்பட்ட தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பப்படாமல் இருந்தது ஆர் டி ஐ மூலம் பகீர் தகவல் கிடைத்துள்ளது.
1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், நளினி, சாந்தனு, பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
தண்டனை காலம் முடிந்தும் இவர்கள் சிறையில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டசபையில் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநரின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் அனுப்பிய தீர்மானத்தை ஜனாதிபதி நிராகரித்ததாக தகவல்கள் வந்தன. இந்நிலையில் இதுகுறித்து ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை குறித்து தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஜனாதிபதி நிராகரித்ததாக அவரது பெயரில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது அம்பலமானது.