வியாழேந்திரன் தொடர்பில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கூட்டமைப்பு!
07 Nov,2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கட்சி தாவி தற்போது பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வியாழேந்திரனை மீளவும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்திலுள்ள அவரது வீட்டில் இன்று (07.11.2018) ஊடகங்களைச் சந்திதித்து மாவை சேனாதிராசா கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழேந்திரன் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார்.
கடந்த மூன்று வருடங்களாக கூட்டமைப்பின் உறுப்பினராகச் செயற்பட்டு வந்த வியாழேந்திரன் அண்மையில் கட்சி தாவி அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவியைப் பெற்றிருக்கின்றார்.
இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ள கூட்டமைப்பு அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய அவரை கூட்டமைப்பிற்குள் கொண்டு வந்த புளொட் அமைப்பு அவரை தனது கட்சியிலிருந்து நீக்க உள்ளதாகவும் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்றும் தமிழரசுக் கட்சியிடம் கோரியுள்ளது.
இதற்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் பிரதி அமைச்சர் பதவியை வியாழேந்திரன் இராஜினாமா செய்துவிட்டு மீளவும் கூட்டமைப்பிற்குள் இணைத்துக் கொள்ளத் தயார் என தமிழரசுக் கட்சியின் செயலாளர் அறிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இது விடயம் தொடர்பில் மாவை சேனாதிராசாவிடம் கேட்ட போது எமது கட்சியிலிருந்து அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவியைப் பெற்றுள்ள வியாழேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அவ்வாறு நடவடிக்கை எடுக்கின்ற போது அவருடைய பதவியையே அவர் இழக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படலாம்.
ஆகவே அவர் திரும்பி வருவது அல்லது அவரை இணைத்துக் கொள்ளவது என்ற பேச்சிற்கே இடமில்லை. அவ்வாறு அவர் திரும்பி வந்தால் இணைத்துக் கொள்வதென யாரேனும் கூறியிருந்தால் அது தவறு. அவர் வந்தாலும் வரவிட்டாலும் அவரை கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப் போவதில்லை என மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்தார்