இலங்கை மீது போர்க்குற்ற விசாரணைக்கு முன்மொழியவேண்டும்
07 Nov,2018
இலங்கை மீது போர்க்குற்ற விசாரணைக்கு முன்மொழியவேண்டும் என்று உறுப்பு நாடுகளுக்கு இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதல்-மந்திரி விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதல்-மந்திரி விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசு மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது என்று அரசியல்வாதிகள் புலம்பத்தொடங்கியிருக்கின்றார்கள். இதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏனெனில் இதுதான் வரலாறு என்று நன்கு தெரிந்துதான் நாம் அவர்களுடன் கரம் கோர்த்தோம். பதவிகளை பெற்றோம். பணம் பெற்றோம். நாமே அவர்களை மனித உரிமைகள் சபையில் பிணை எடுத்தோம்.
ஆனால் சிங்கள அரசியல்வாதிகளோ நம்மை பயன்படுத்தி அவர்களுக்கு எதிரான சகல தடைகளையும் உடைத்துவிட்டு எந்த விதமான குற்ற உணர்வும் இன்றி அதிகார போட்டியில் இறங்கியுள்ளனர்.
தமிழர் பிரச்சினைகளை
எனவே, இனிமேலாவது கட்சி நலன்களை புறந்தள்ளிவிட்டு கொள்கை அடிப்படையில் நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்கு அமைவாக நிறுவனப்பட்ட செயற்பாட்டை நாம் முன்னெடுக்கவேண்டும். அதாவது இருட்டில் கையாட்டிப் பார்க்காமல் பாதை தெரிந்து பயணிக்கவேண்டும்.
சிங்கள ஆட்சியாளர்களின் மனநிலையை உலகுக்கு எடுத்து கூறவேண்டும். ஒற்றையாட்சி அடிப்படையிலான இலங்கை அரசியல் அமைப்புக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கட்டமைப்பு சார்ந்த தடைகளை சர்வதேச சமூகம் இனிமேலாவது புரிந்துகொள்ள வழி வகுக்கவேண்டும். தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம் என்பதை புரிந்துகொண்டு இனிமேலும் காலம் தாழ்த்தாமல் தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வழி வகுக்கவேண்டும். சர்வதேச சமூகம் தற்போது தமிழர் பிரச்சினைகளை பார்க்கவேண்டிய காலம் வந்துள்ளது. நாம் நமது கடமைகளை சரியாக ஆற்ற முன் வரவேண்டும்.
போர்க்குற்றம்
இதுதொடர்பாக எதிர்வரும் ஜெனிவா மனித உரிமைகள் சபை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக ஒரு சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை முன்வைக்குமாறு உறுப்பு நாடுகளையும், ஏனைய நாடுகளையும் தமிழ் மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.
இதற்கிடையே இறுதி யுத்தத்தில் என்ன நடைபெற்றது? எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள்? எத்தனை பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள்? என்பது போன்ற உண்மைகளை எங்களது சிங்கள சகோதரர்களுக்கு எடுத்துச்சொல்ல முடிவதுடன், புரிந்துணர்வு ஏற்படுத்தி உண்மையான இன நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும். இல்லாவிட்டால் குற்றம் இழைத்தவர்கள் தம்மை பாதுகாப்பதற்காக போலி தேசியவாதத்தை கையில் எடுத்து இன முரண்பாட்டை மேலும் சிக்கல் நிலைக்கு உட்படுத்துவதற்கே இன்றைய நிலைமைகள் வழிவகுக்கும். நமது மக்கள் தலைவர்கள் விரைந்து செயற்படுவார்களா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.