தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பித்த ஜனாதிபதி
04 Nov,2018
போர் காலத்திலும் அதற்கு பின்னரும் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்ததுடன் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் மற்றும் ஹர்த்தால் போராட்டங்களும் நடத்தப்பட்டதுடன் அரசாங்கம் அதற்கு பதிலளிக்கவில்லை.
கடந்த மூன்று ஆண்டுகளாக நல்லாட்சி அரசாங்கமும் இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் நீதியமைச்சர் இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லை எனக் கூறியிருந்தார்.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமாயின் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்க வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அண்மையில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.