இலங்கை அரசியலில் கடந்த வாரம் திடீர் திருப்பம் ஏற்பட்டது.
பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேயை அதிரடியாக அதிபர் சிறிசேனா நீக்கினார்.
அவருக்கு பதில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயை அழைத்து புதிய பிரதமராக சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஏற்கவில்லை. தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடிப்பதாக கூறிய அவர் பிரதமர் இல்லமான அலரி மாளிகையில் இருந்தும் வெளியேற மறுத்து விட்டார்.
இந்த நிலையில் ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவான நிலையை சபாநாயகர் கரு ஜெயசூர்யா எடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஒருவர் பிரதமராக தேர்வு செய்யப்படும் வரை ரனில் விக்ரமசிங்கேதான் பிரதமராக நீடிப்பார் என்று அவர் அறிவித்துள்ளார். இதனால் இலங்கை அரசியலில் உச்சக்கட்ட குழப்பமும், பதட்டமும் நிலவுகிறது.
பிரதமர் பதவியில் ராஜபக்சே, ரனில் விக்ரமசிங்கே இருவரும் இருப்பதாக கூறி வருகிறார்கள். இதனால் இலங்கை பிரதமர் யார் என்பதில் சர்வதேச அளவில் குழப்பம் எழுந்துள்ளது. ராஜபக்சேக்கு சீனாவை தவிர வேறு எந்த நாடும் வாழ்த்து சொல்லவில்லை.
மாறாக எல்லா நாடுகளும் ரனிலுக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வருகின்றன. என்றாலும் இலங்கை அதிபர் சிறிசேனா எதையும் கண்டு கொள்ளாமல் ராஜபக்சேக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். மூன்று ஆண்டுகளாக எதிரிகளாக இருந்த சிறிசேனாவும், ராஜபக்சேவும் கை கோர்த்து இருப்பதால் இலங்கையில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று ராஜபக்சே ஆதரவாளர்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கொழும்பு நகர வீதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இது பதட்டத்தை அதிகரிக்க செய்துள்ளது.
குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் பீதி நிலவுகிறது. இதையடுத்து சட்டம்-ஒழுங்கை பேணுமாறு பல்வேறு சர்வதேச நாடுகள் இலங்கையை வலியுறுத்த தொடங்கியுள்ளன. அரசியல் சாசன சட்டப்படி செயல்படும்படி இலங்கையை ஐ.நா.வும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென யாருக்கும் தெரியாமல் பிரதமர் பதவியை ஏற்ற ராஜபக்சே இன்று (திங்கட்கிழமை) அதிகாரப் பூர்வமாக பிரதமர் பொறுப்பை ஏற்றார். கொழும்பு அரசவை மண்டபத்தில் அவர் பொறுப்பு ஏற்கும் விழா 11 மணிக்கு தொடங்கி நடந்தது.
இன்று அதிகாரப்பூர்வமாக ராஜபக்சே பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதால் பிரதமருக்குரிய அதிகாரப்பூர்வ அதிகாரம் அனைத்தும் ராஜபக்சே கைகளுக்கு சென்றுள்ளது. அமைச்சரவையில் வெளியுறவு இலாகா, சுகாதாரம், சட்டம்-ஒழுங்கு, பொது நிர் வாகம், ஊடகம், பாதுகாப்பு, நிதி ஆகிய துறைகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.
ராஜபக்சே தலைமையில் அமைக்கப்படும் அமைச்சரவையில் 30 பேர் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் ராஜபக்சேயின் தீவிர ஆதரவாளர்கள் ஆவார்கள். அவர்கள் அனைவருக்கும் நாட்டின் முக்கியமான பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் சட்டம்- ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பை ராஜபக்சே ஏற்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இலங்கையின் ஆட்சி, அதிகாரம் அனைத்தும் இன்று முதல் ராஜபக்சே மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைவசம் போய் சேர்ந்துள்ளது.
அனைத்து அதிகாரங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்ட ராஜபக்சே இனி மெல்ல மெல்ல தனது சுயரூபத்தை வெளிப்படுத்துவார் என்று கூறப்படுகிறது. சீனா ஆதரவாளரான அவர் இந்தியாவுக்கு எதிராக இனி துணிச்சலுடன் செயல்படுவார் என்று கருதப்படுகிறது.
அதற்கு முன்பு ராஜபக்சே தனது பிரதமர் பதவியை உறுதிப்படுத்திக் கொள்ள பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபித்துக் காட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் அடுத்த மாதம் 16-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள இலங்கை பாராளுமன்றம் மீண்டும் எப்போது கூட்டப்படும் என்று தெரியவில்லை.
பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் போது பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்சேக்கும் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே கடும் பலப்பரீட்சை நடக்கும். தற்போது ராஜபக்சேக்கு 95 எம்.பி.க்களும், ரனில் விக்ரமசிங்கேக்கு 106 எம்.பி.க்களும் ஆதரவாக உள்ளனர்.
மொத்தம் 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபித்துக் காட்ட 113 எம்.பி.க்கள் ஆதரவு வேண்டும். ராஜபக்சேக்கு 18 எம்.பி.க்களும், ரனில் விக்ரமசிங்கேவுக்கு 7 எம்.பி.க்களும் குறைவாக உள்ளனர்.
இந்த நிலையில் 16 எம்.பி.க்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டணியும், 6 எம்.பி.க்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் ஜே.வி.பி. கட்சியும் என்ன முடிவு எடுக்கும் என்று தெரியவில்லை. இதனால் இலங்கையில் குதிரை பேரம் தொடங்கியுள்ளது. சுமார் 20 எம்.பி.க்களுக்கு ராஜபக்சே விலை பேசி உள்ளார்.
ரனில் விக்ரமசிங்கேயை முழுமையாக தனிமைப்படுத்த சிறிசேனாவும் ராஜபக்சேக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அவருக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் எதையும் கண்டு கொள்ளாத சிறிசேனா தொடர்ந்து அதிரடிகளில் ஈடுபட்டுள்ளார்.
பொது நிர்வாகம், ஊடகம் அனைத்தையும் சிறிசேனா முடக்கியுள்ளார். இதனால் இலங்கையில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் ராஜபக்சே கையில் அதிகாரம் கொடுக்கப்பட்டு விட்டதால் அவர் பழைய மாதிரி தனது அரசியல் எதிரிகளை பழி வாங்கும் செயல்களை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜபக்சே அரசு முதல் அதிரடியாக அரசு ஊழியர்களுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “அரசு ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கடமைகளை சரிவர செய்ய வேண்டும். விதிகளுக்கு முரணாக செயல்படும் அரசு ஊழியர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊடக பேச்சாளர்களாக மகிந்த சமரசிங்கா, கெகலிய நம்புக்வெல் ஆகிய இருவரையும் நியமித்துள்ளனர். இதன் மூலம் ராஜபக்சே தனது கோர முகத்தை காட்டத் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.