மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய இலங்கை அமைச்சரவை பதவியேற்பு
29 Oct,2018
நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
பதவி ஏற்றுக் கொண்டுள்ள மற்ற அமைச்சர்கள் விவரங்கள்:
நிமல் சிறிபால டி சில்வா - போக்குவரத்து, சிவில் விமான சேவைகள்
டொக்டர் சரத் அமுனுகம - வெளியுறவு
மகிந்த சமரசிங்க - துறைமுகங்கள், கப்பல்துறை
மகிந்த அமரவீர - கமத்தொழில்
ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய - மின்வலு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி
கலாநிதி விஜயதாச ராஜபக்ச - கல்வி, உயர்கல்வி
விஜித் விஜயமுனி சொய்சா - மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி, கிராமிய பொருளாதாரம்
ஆறுமுகன் தொண்டமான் - மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி
டக்ளஸ் தேவானந்தா - மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து சமய அலுவல்கள்
பைசர் முஸ்தபா - மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்றங்கள், விளையாட்டுத்துறை
வசந்த சேனாநாயக்க - சுற்றுலாத்துறை, வனசீவராசிகள்
திங்கட்கிழமையன்று 12 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் இருவரும் இன்று (29) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றனர்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை நியமித்த 14 அமைச்சர்களில் 4 பேர், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து கட்சி மாறியவர்களாவர்.
இவர்களில் விஜேதாஸ ராஜபக்ஷ மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளும், வடிவேல் சுரேஷ் மற்றும் ஆனந்த அளுத்கமகே ஆகியோருக்கு முறையே ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன
தனித்து ஒரு கட்சி ஆட்சியமைக்கும் போது, 30 பேரைக் கொண்ட அமைச்சரவை ஒன்றினையே அமைக்க முடியும் என, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் கூறுகிறது. தற்போது 12 பேர் மட்டுமே, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவாக இருந்த 107 நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை (ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 106 பேர், மு.காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர்) 103 ஆக குறைந்துள்ளது.
இதேவேளையில், மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 100ஆக அதிகரித்துள்ளது. 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கையின் நாடாளுமன்றத்தில், 113 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் தரப்பு, பிரதமர் பதவியைப் பெற்றுக் கொண்டு ஆட்சியமைக்க முடியும்.