அடாவடித்தனத்தில் ஈடுபடும் தேரரை மாவட்டத்தை விட்டு வெளியேற்ற வேண்டும்: அரியநேத்திரன்
24 Oct,2018
அடாவடித்தனத்தில் ஈடுபட்டு இராணுவத் தளபதி போன்று செயல்படும் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ண தேரரை இடமாற்றம் செய்யவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மயிலம்பாவெளியில் செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்தை அச்சுறுத்தி அடாவடி செய்த அம்பிட்டிய சுமணரட்ண தேரர் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மயிலம்பாவெளியில் புத்த துறவியின் காட்டு மிராண்டித்தன செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த புத்த துறவி பௌத்த மதத்திற்கு அவமானச்சின்னம். காவி உடைதரித்த இராணுவ கட்டளை அதிகாரி போன்றே இவரின் நடத்தை உள்ளது.
எல்லைக் கிராமங்களில் அத்துமீறி காணி அபகரிப்பு செய்வதும் அதை தடுக்க சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் அலுவலர்கள் சென்றால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் அதிகாரிகளை தாக்க முயற்சிப்பதும், ஒரு மத குருவாக அன்றி இராணுவத் தளபதி போன்று இவர் செயல்படுவதைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.
இவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து இடமாற்ற வேண்டும் என அப்போது நாம் தெரிவித்தோம் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நல்லாட்சி அரசு என்று பெயரளவில் கூறிக்கொண்டு, தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிகாரிகளையும் அலுவலர்களையும் விரட்டி தாம் நினைத்ததை சாதித்து வரும் இவ்வாறான புத்த துறவிகளால் அரசுக்கு மட்டுமல்ல பௌத்த மதத்திற்கும் ஒரு அவமானமாகவே கருதமுடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.