தமிழ் கைதிகளை விடுதலை செய்தால் பட்ஜெட் ஓட்டெடுப்பில் ஆதரவு - தமிழ் தேசிய
14 Oct,2018
இலங்கை நாடாளுமன்றத்தில் வருகிற 4-ந்தேதி அதிபர் சிறிசேனாவின் அரசு பட்ஜெட் தாக்கல் செய்கிறது. இதைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் அதன் மீது ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது. ஆனால் முன்னாள் அதிபர் ராஜபக்சே தனது ஆதரவு எம்.பி.க்கள் மூலம் பட்ஜெட் ஓட்டெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்து, சிறிசேனாவின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி மேற்கொள்ளலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே சிறிசேனா அரசு தப்பும் நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் வடக்கு மாகாண முதல்-மந்திரியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவருமான சி.வி.விக்னேஷ்வரன் யாழ்ப்பாணம் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:-
விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாக கைது செய்யப்பட்ட ஏராளமான தமிழ் இளைஞர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இந்த இயக்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் கருணா நாட்டில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் இலங்கை அரசு விடுதலை செய்யவேண்டும். அப்போதுதான் பட்ஜெட் ஓட்டெடுப்பின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறிசேனா அரசுக்கு ஆதரவாக செயல்படும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி கட்சியிடம் கேட்டுக்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்