உண்மையை கண்டறிவதற்கான ஆணைக்குழு நிறுவப்படாமை குறித்து கூட்டமைப்பு, பிரித்தானியாவிடம் எடுத்துரைப்பு
05 Oct,2018
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் பாரிய தாமதம் காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், பிரித்தானியாவிடம் எடுத்துரைத்துள்ளார்.
இலங்கைக்கு சென்றுள்ள பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியங்களுக்கான அமைச்சர் மார்க் பீல்ட் இன்று(வெள்ளிக்கிழமை) எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போதே சம்பந்தன் இந்த விடயத்தை எடுத்து கூறியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளில் மாற்றம் உள்ளதாக இந்த சந்திப்பில், அமைச்சர் மார்க் பீல்டிடம், சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், காணி பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் ஆகிய விடயங்களில் குறிப்பிடத்தக்க தாமதம் நிலவுவதாகவும் அவர், கூறியுள்ளார்.
இந்த விடயங்கள் தாமதங்களின்றி செயற்படுத்தப்பட்டிருக்க வேண்டியவை எனவும் சம்பந்தன், அமைச்சர் மார்க் பீல்ட்டிடம் எடுத்து கூறியுள்ளார்.
மேலும் உண்மையை கண்டறிவதற்கான ஆணைக்குழு இன்னமும் நிறுவப்படாமை கவனிக்கப்படவேண்டிய விடயம் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் அதிகாரப்பகிர்வு கோரிக்கையானது ஒரு அரசியல் யாப்பினூடாக தீர்க்கப்பட வேண்டியது அவசியம் எனவும் கூட்டமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
பிளவுபடாத, பிரிக்கமுடியாத ஒருமித்த இலங்கையில் தீர்வொன்றை எதிர்பார்ப்பதாக சுட்டிக்காட்டிய சம்பந்தன், இதற்கு மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் அரச தலைவர்கள் மத்தியில் அரசியல் விருப்பு குறைவாக காணப்படுவதாக தெரிவித்தார்.
அதேவேளை அநேக விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டபோதிலும் இன்னும் ஒரு தயக்க நிலை அரச தலைவர்கள் மத்தியில் காணப்படுவதாகவும், சுமந்தரன் தெரிவித்தார்.
மேலும், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் அரசாங்கம் பாரிய தாமதத்தை கொண்டுள்ளதாகவும் கூட்டமைப்பின் தலைவர் எடுத்துரைத்துள்ளார்.
சுமார் ஒரு மணித்தியாலம் இடம் பெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் மற்றும் தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.